Apr 19, 2011

மே 18 தமிழீழ தேசிய துக்க நாள்!!

ஏப்ரல் 20, ஈழத்தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்தது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை.

இந்த நாளை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18ஆம் திகதியினை ‘தமிழீழ தேசிய துக்க நாளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் மே 12 தொடக்கம் 18 வரையான நாட்களை நினைவேந்தல் வாரமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்களில் துயர் பகிரவும், உணர்வு பெற்று எழுச்சி கொள்ளும் வகையில் தேசிய துக்கநாளை அனுட்டிப்பதென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரான திருமதி ஜெயமதி சிவசோதியினால் தனிநபர் மசோதாவாகப் பேரவையின்முன் வைக்கப்பட்டது.

இம் முன்மொழிவு அவை உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக நாடு கடந்த அரசின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமார் அறிவித்துள்ளார்.

இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ள ஒரு தேசம், தமது பாதுகாப்பான வாழ்வுக்கு தனி அரசினை அமைப்பதன் ஊடாக நியாயமும் நீதியும் தேடுவதென்பது அனைத்துலக சட்டங்களினிடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

தேசங்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிஅரசினை அமைப்பதற்கும் அனைத்துலக சட்டங்கள் வழிவகை செய்கின்றன. ஆனால் இச் சட்டங்கள் எல்லாம் உலகின் பலம் வாய்ந்த அரசுகள் விரும்பும்போது மட்டும்தான் செயல் வடிவம் பெறுகின்றன.

நீதியின்பாற்பட்டு அன்றி தமது சுயநலன் சார்ந்தே இந்த அரசுகள் தமது முடிவுகளை மேற்கொள்கின்றன. இத்தகையதொரு உலக ஒழுங்கில்தான் நாம் நமது இலட்சியப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் தமிழீழ தேசிய துக்க நாளையொட்டிய நினைவேந்தல் வாரத்தில் நினைவு வணக்க நிகழ்வுகள், வழிபாடுகள், தீச்சுடர் ஏந்திய ஒன்றுகூடல்கள், கருத்தரங்குகள், இரத்தானங்கள் உட்பட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெவ்வேறு நாடுகளிலும் ஏற்பாடு செய்துவருகிறது என உருத்திரகுமாரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: