மார்ச் 31, மதுரை: "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல,' என, வீட்டின் முன் எழுதி தொங்க விட்டுள்ளார், மதுரை அண்ணாநகர் குருவிக்காரன்சாலையில் குடியிருக்கும் அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி இல்ல காப்பாளர் ஜான்(51).
சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுப்பதில் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டுகிறது. தேர்தல் அதிகாரிகள் மூலம் அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்தும் வருகிறது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளால் பணம் பட்டுவாடா செய்ய முடியாமல் கட்சிகள் திணறுகின்றன.
பணம் பெற்று ஓட்டளிக்க கூடாது, என்ற விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஜான் துணிச்சலாக, "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல. ஓட்டளிக்க பணம் தர முன்வரும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை,' என, எழுதி வீட்டின் முன் தொங்கவிட்டுள்ளார்.
அவ்வழியாக செல்வோரின் கவனத்தை இவ்வாசகங்கள் ஈர்க்கின்றன. இதை கவனித்து தெருவில் குடியிருக்கும் சிலர் இது போல எழுதி வைக்க திட்டமிட்டுள்ளனர். ஜானின் மனைவி சிந்தா சேக்கிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். ஜான், பத்து தேர்தல்களில் ஓட்டளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, ஓட்டுக்கு பணம் வழங்க கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஓட்டுக்கு பணம் வழங்குவது குற்றம். அதை பெறுவது அதை விட குற்றம். லஞ்சம் வாங்குவதற்கு சமம்.
ஓரிரு நாட்களுக்கு முன், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என, கலெக்டர் சகாயம் பேசியதாக தினமலர் இதழில் செய்தி படித்தேன்.அதை பின்பற்ற முடிவு செய்து, எழுதி வைத்தேன்.
இதை பார்த்துவிட்டு, மற்றவர்களும் எழுதி வைப்பதாக கூறியது மகிழ்ச்சி என்றார்.இவரை போன்று அனைத்து வாக்காளர்களும், பணம் பெற்று ஓட்டளிக்க மாட்டேன் என்று சபதம் ஏற்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment