‘நட்டம் வரும் பொதுத்துறைகளை முட்டுக் கொடுத்து நிறுத்துவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும், அதனால் அவற்றை மட்டும் தனியாருக்கு விற்கப்போவதாகவும்’ சொல்லித்தான் தனியார்மயத்தை துவக்கத்தில் நியாயப்படுத்தியது பாரதிய ஜனதா அரசு. ஆனால், அரசின் புள்ளிவிவரங்களின் படியே 1992-98 காலத்தில் பொதுத்துறையின் இலாப விகிதம் 20.9% ஆகவும், தனியார் துறையின் இலாப விகிதம் 14.7% ஆகவும் இருந்தது. 1997-98 இல் அரசுத்துறையின் இலாப விகிதம் 26.9%. தனியார் துறையின் இலாபம் 2.5%.
இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் புதைத்து விட்டு, அரசுத் துறைகள் நட்டத்தில் நடப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து, நாட்டை ஏமாற்றித்தான் அன்றைய பா.ஜ.க. ஆட்சியில் தனியார்மயமாக்கலுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்ட அருண்ஷோரி தனியார் மயத்தை நியாயப்படுத்தினர்.
இலாபத்தில் நடக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றால், அந்த அயோக்கியத்தனத்தை மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவது கடினம் என்பதால், அத்தகைய நிறுவனங்களின் உபரியை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் அவற்றை நட்டத்தில் தள்ளும் சதிகளில் அரசு இறங்கியது. விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பை நிர்ணயம் செய்யவும், விற்பனையை நியாயப்படுத்தும் வகையில் நட்டக் கணக்கு காட்டவும் மெக்கின்சி, பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் போன்ற உலக வங்கியால் சிபாரிசு செய்யப்படும் ஆலோசனை நிறுவனங்கள் அரசால் அமர்த்திக் கொள்ளப்பட்டன. இந்துஸ்தான் லீவருக்கு மாடர்ன் ஃபுட்ஸ் பங்குகளும், ஸ்டெரிலைட்டுக்கு பால்கோவின் பங்குகளும், டாடாவுக்கு வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்குகளும் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. வாங்கிய மறுகணமே இந்நிறுவனங்களின் சில சொத்துகளை மட்டுமே விற்று, போட்ட முதலுக்கு மேல் அவர்கள் காசு எடுத்து விட்டார்கள்.
பா.ஜ.க. ஆட்சி பொதுத்துறை தொழில்களை விற்பதற்கு ஒரு அமைச்சரையே நியமித்தது. டிஸ் இன்வெஸ்ட்மென்ட் துறை என்றழைக்கப்பட்ட இந்த அமீனாத் துறையின் அமைச்சராக இருந்தவர் அருண் ஷோரி. 1999 முதல் 2003 வரை அருண் ஷோரியின் அமைச்சகத்துக்கு செயலராகவும், 2004 முதல் 2006 வரை தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் இருந்து ‘கொள்கைபூர்வமாக’ பொதுத்துறையை முதலாளிகளுக்கு உடைமையாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெயர் பிரதீப் பெஜால். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2007-இல் இவர் நீரா ராடியாவிடம் வேலைக்குச் சேர்ந்து, 2-ஜி அலைக்கற்றைகளை டாடாவுக்குச் சகாய விலையில் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment