தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு "டுவென்டி-20' மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் சச்சின் சேர்க்கப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. செஞ்சுரியனில் நடந்த முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்து, தொடரில் பின்தங்கியுள்ளது. இத்தொடர் முடிந்தவுடன் ஒரு "டுவென்டி-20' (ஜன., 9, 2011), ஐந்து ஒருநாள் போட்டிகளில் (ஜன., 12-23, 2011) இந்திய அணி பங்கேற்கிறது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2011 உலககோப்பை தொடருக்கு முன் இந்தியா பங்கேற்கும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் சச்சின், சேவக் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். விக்கெட் கீப்பர் கேப்டன் தோனி தவிர, ஆறு பேட்ஸ்மேன்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஒரு ஆல் ரவுண்டர், 5 வேகப்பந்து, 3 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
சச்சின் "ரெடி': கடந்த பிப்., மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான குவாலியர் ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் கடந்து சாதித்த சச்சின், அதன் பின் எந்த ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. தற்போது, உலக கோப்பை தொடருக்கு தயாராக வேண்டும் என்பதால் சச்சின் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, கடந்த 2006ல் ஜோகனஸ்பர்க்கில் (தென் ஆப்ரிக்கா) நடந்த "டுவென்டி-20' போட்டிக்கு பின், சச்சின் தானாகவே இவ்வகை போட்டிகளில் இருந்து விலகிக்கொண்டார். தற்போது 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான, "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேவக் வருகை: காயம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் இருந்த அதிரடி வீரர் சேவக், ஹர்பஜன் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளனர். தவிர, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர் இடத்தை ரவிந்திர ஜடேஜாவிடம் இருந்து யூசுப் பதான் தட்டிச் சென்றார். நியூசிலாந்து தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா, சவுரப் திவாரி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்று, அடுத்தடுத்து அரைசதம் விளாசிய பார்த்திவ் படேல், காரணம் தெரியாமல் நீக்கப்பட்டார். அதேநேரம், சுழற்பந்து வீச்சாளர் பியுஸ் சாவ்லா இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வாய்ப்பு பெற்றுள்ளார்.
"டுவென்டி-20', ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 16 வீரர்கள் அடங்கிய அணி விபரம்:
தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், விராத் கோஹ்லி, ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், ஆஷிஸ் நெஹ்ரா, பிரவீண் குமார், முனாப் படேல், அஷ்வின், யூசுப் பதான், ஸ்ரீசாந்த், பியுஸ் சாவ்லா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment