அரசியல் தரகராகச் செயல்பட்ட வைஷ்ணவி கம்யூனிகேஷன் நிறுவனத் தலைவர் நீரா ராடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். ராடியாவிடம் விசாரணை நடத்துவதற்காக வழக்கத்துக்கு மாறாக சிபிஐ அதிகாரிகள் அவரது பண்ணை இல்லத்துக்குச் சென்றுவிட்டனர். வழக்கமாக சிபிஐ அலுவலகத்தில்தான் விசாரணை நடைபெறும். விசாரிக்கப்படும் நபர் சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்படும். ஆனால் நீரா ராடியா விஷயத்தில் சிபிஐ அதிகாரிகள், தில்லி சத்தர்பூர் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். இது அரசியல் வட்டாரத்திலும் அதிகாரிகள் அளவிலும் வியப்பை ஏற்படுத்தியது. சிபிஐ அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், சிபிஐ அலுவலகத்தில்தான் விசாரணை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. விசாரணை அதிகாரியின் விருப்பத்தைப் பொறுத்து விசாரணை நடைபெறும் இடம் எது என்பது முடிவு செய்யப்படும் என்றார்.
பெண்கள் மற்றும் 15 வயதுக்குள்பட்டவர் என்றால் அவர்களின் வீட்டுக்கே சென்று விசாரிக்க விதி உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன் இதுபோன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, அரசியல் தரகர் நீரா ராடியா ஆகியோருக்கு சிபிஐ திங்கள்கிழமை சம்மன் அனுப்பியது. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நிகழ்ந்ததால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்படுவதாக சிபிஐ மீது, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை உறுதிப்படுத்தியது. இதனால் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் ராசா. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ராசாவின் வீடு, அலுவலகம், அவரது உறவினர், நண்பர்களின் வீடுகளில் இரண்டு முறை சோதனை நடத்தினர். இது தவிர, அரசியல் தரகராகச் செயல்பட்ட வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் நீரா ராடியாவின் அலுவலகங்கள், வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது. அரசு பங்கு விற்பனைப் பிரிவின் செயலரும், டிராய் அமைப்பின் தலைவருமாக இருந்த முன்னாள் அதிகாரி பிரதீப் பைஜால் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆ. ராசா, நீரா ராடியா இருவரும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. திங்கள்கிழமை நோட்டீஸ் கொடுத்துவிட்டு செவ்வாய்க்கிழமை காலை நீரா ராடியாவின் பண்ணை வீட்டை சிபிஐ அதிகாரிகள் முற்றுகையிட்டனர். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் பேரம், பல முக்கிய புள்ளிகளுடன் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல் ஆகியவை குறித்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர். விசாரணைக்குப் பின்னர் நீரா ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சிபிஐ அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது என்றும் இந்த விசாரணையில் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நீரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணை அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு ஆஜராகுமாறு ராசாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் தில்லியில் உள்ள அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும். இப்போது ராசா, சென்னையில் உள்ளார். அவர் எப்போது நேரில் ஆஜராவார் என்பது தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சில நிறுவனங்களுக்கு ராசா சலுகை காட்டியதால் அரசுக்கு குறைந்தபட்சம் ரூ. 22 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ மதிப்பிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment