பாஸ்டன் : மனித உரிமை போராட்டத் தலைவர் பிநாயக் சென்னுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு சதுக்கத்தில் போராட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பிநாயக் சென்னுக்கு ஆயுள்தண்டனை விதித்ததுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், கோஷம் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து சத்தீஸ்கர் அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக சிவில் உரிமைகளுக்கான மக்கள் அமைப்பின் துணைத் தலைவர் பிநாயக் சென், மாவோயிஸ்ட் தலைவர் நாராயண் சன்யால், கொல்கத்தா தொழிலதிபர் பியூஷ் குஹா ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளித்து வரும் டாக்டர் விநாயக் சென்னுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு இந்தியாவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிநாயக் சென் குற்றமற்றவர்; ஏழைகளுக்கு உதவியும், மனித உரிமையை காக்கப் போராடி வருபவருக்கு இத்தகைய தண்டனையை விதித்தது ஏற்கத்தக்கதல்ல என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் பிநாயக் சென்னுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். பாஸ்டனில் நடந்த போராட்டத்தில், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பினர், இந்திய வளர்ச்சிக்கான அமைப்பைச் சேர்ந்தவர்கள், தெற்கு ஆசிய மைய அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவரும், அமெரிக்காவின் டஃப்ட்ஸ் மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியருமான ஹோனோரின் கூறுகையில், இரு வாரங்களுக்கு முன்பு வேலூர் போயிருந்தேன். அப்போது அங்கு பிநாயக் சென்னையும், அவரது மனைவியையும் சந்தித்தேன். இந்தியாவைவிட்டு வெளியேறும் திட்டம் உள்ளதா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், இந்தியாவில் கஷ்டங்களை சந்தித்து வரும் மக்களுக்கு நிறைய உதவ வேண்டியுள்ளது. அந்தப் பணியைவிட்டு விட்டு எப்படி வேறு நாடுகளுக்கு செல்ல முடியும் என்று பிநாயக் சென் தெரிவித்தார். இப்படி நல்ல மனிதர் மீது குற்றம்சுமத்தி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment