பீஜிங் : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, போப் பெனடிக்ட் விடுத்திருந்த செய்தியில், சீனா குறித்து தெரிவித்திருந்தார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல்வாதி போல போப் பேசியுள்ளார். சீன விவகாரங்களில் தலையிடுவதை அவர் நிறுத்த வேண்டும்' என, அந்நாட்டு அரசின் பத்திரிகை கூறியுள்ளது. கடந்த 1949ல் சீனாவில் மா சே துங் தலைமையிலான கம்யூ., கட்சி, ஆட்சியைப் பிடித்த பின், தாவோயிசம், பவுத்தம், இஸ்லாம், கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் ஆகிய ஐந்து மதங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டன.
சீன தலைமை கத்தோலிக்க திருச்சபைக்கும், வாடிகனுக்கும் சம்பந்தம் கிடையாது. "தேசாபிமான திருச்சபை' என்ற பெயரில், சீன அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் அது இயங்கி வருகிறது. சீனாவில் திருச்சபை ஆயர்களை வாடிகன் நியமிக்க முடியாது; அரசு தான் ஆயர்களை நியமிக்கும். இதனால், சீனா - வாடிகன் உறவு முறிந்து 60 ஆண்டுகளாகிவிட்டன. இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, போப் பெனடிக்ட் வெளியிட்ட சிறப்புச் செய்தியில், "சீனக் கிறிஸ்தவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். தங்கள் மதச் சுதந்திரம் மீது, மேலும் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், அவர்கள் மனம் தளர்ந்து விட வேண்டாம். கிறிஸ்து மற்றும் அவரது சர்ச்சின் மீதான விசுவாசம் உங்களது நம்பிக்கைச் சுடரை அணையாது காக்கும்' என்றார்.
இதற்கு, சீன கம்யூ., கட்சியின் நாளிதழான, "பீப்பில்ஸ் டெய்லி'யின் ஆங்கிலப் பதிப்பான, "குளோபல் டைம்சில்' தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போப்பின் குரல் மதகுரு என்பதை விட அரசியல்வாதியின் குரலாகவே வெளிப்பட்டிருக்கிறது. சீன விவகாரங்களில் தலையிடுவதை வாடிகன் நிறுத்திக் கொள்ள வேண்டும். சீன ஆயர்கள் வழக்கம் போல் தங்களுக்குள் தேர்தல் நடத்தி தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். இது, போப்பை எரிச்சல்படுத்துகிறது. உலகம் மாறி வருகிறது. மத நம்பிக்கைக்குப் பின்னால், சமூக அரசியல் பின்புலங்கள் உள்ளன. உலகம் செல்லும் வேகத்தையும், பாதையையும் தடுக்கும் ஆற்றல் வாடிகனுக்குக் கிடையாது.
சீனாவில் அனைத்து மதங்களும் சுதந்திரமாக இயங்குகின்றன. சட்டத்தை எதிர்த்து யாரும் இங்கு செயல்பட முடியாது. மத நம்பிக்கை தனிமனித சுதந்திரம். அதேநேரம், ஒவ்வொருவனும், சட்டத்தாலும் குடிமகன் என்பதாலும் அடையாளப்படுத்தப்படுகிறான். விரைவிலோ அல்லது தாமதித்தோ, சீனா பற்றிய தனது கொள்கையை வாடிகன் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்தப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment