Dec 27, 2010

அமெரிக்காவில் பனிப்புயல்: 2,000 விமானங்கள் ரத்து.

நியூயார்க் : அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர பகுதியில், நேற்று கடும் பனிப்புயல் வீசியதால், நாட்டின் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆறு மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நேற்று கடுமையான பனிப்புயல் வீசியது. நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் வீசிய இப்புயலால், இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. நியூயார்க் விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையங்களில் தங்கியுள்ளனர். நியூயார்க்கில் மட்டும் 46 செ.மீ., அளவிற்கு பனி பெய்தது. மாசாசூசெட்ஸ், மெயின், மேரிலேண்ட், நியூஜெர்சி, வடக்கு கரோலினா மற்றும் விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தென் மாகாணங்களான ஜியார்ஜியா மற்றும் தெற்கு கரோலினா ஆகியவை, 100 ஆண்டுகளுக்கு பின் கடுமையான பனிப்பொழிவை சந்தித்துள்ளன. எனினும், தலைநகர் வாஷிங்டன் இந்த புயலில் இருந்து தப்பியுள்ளது. அங்கு சிறிய அளவில் மட்டும் பனிப்பொழிவு காணப்பட்டது. மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் வீசிய இந்த பனிப்புயல், நியூஜெர்சி, நியூயார்க் நகரையும், கனடா நாட்டையும் தாக்கியதாக வானிலை ஆய்வு மையத்தினர் கூறியுள்ளனர். பனிப்புயல் காரணமாக கிறிஸ்துமஸ் முடிந்த பின்னும் மக்கள் அவரவர் ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளாயினர். பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் ஒழிய, பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ரஷ்யாவிலும் பனி: கடும் பனிப்பொழிவு காரணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள டொமொடெடோவோ விமான நிலையம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறது. அங்கு எந்தவிதமான மின் விளக்குகளும் எரியவில்லை. விமான நிலையத்தின் முதலுதவி மையமான இத்தார் டாசில் உள்ள அவசர நிலை விளக்குகள் கூட கடும் பனி காரணமாக இயங்கவில்லை. விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தெரு விளக்குகளும் செயல்படவில்லை. விமான நிலையத்தில் தங்கியுள்ள பயணிகள் வைத்திருக்கும் மொபைல்போன் திரைகளில் இருந்து வெளிப்படும் ஒளி தான் அங்கு பலருக்கு வழிகாட்டி கொண்டிருக்கிறது.

No comments: