பார்வதி, தான் குளிப்பதனை யாரும் உற்றுப்பார்த்து விடாமல் இருக்க தனது உடலிலிருந்த அழுக்கினை உருட்டி பிள்ளையார் சிலையொன்றினைச் செய்து, அதற்கு உயிர் கொடுத்து, தான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை யாரையும் உள்ளே வர அனுமதிக்காதே என விநாயகருக்கு கட்டளையிட்டு வாசலில் காவல் இருக்கும்படி கேட்டு கொண்டார். பார்வதி குளித்துக் கொண்டிருக்கும்போது அவளுடைய கணவர் சிவன் நுழைய முற்பட்டார். அவரை விநாயகர் தடுத்தார். இதில் ஆத்திரம் கொண்ட சிவன், தனது இடையில் செருகியிருந்த வாளால் விநாயகரின் கழுத்தைத் துண்டித்தார். விநாயகர், ”அம்மா” எனக் கதறி உயிரை விட்டார். சத்தம் கேட்டு வெளியே வந்த பார்வதி தலையில்லா விநாயகரைக் கண்டு துக்கம் தாளாமல் அழுதார். தனது மனைவியைத் தேற்றுவதற்காக வெட்டுண்ட தலையைத் தேடியபோது தலையைக் காணவில்லை. இதனால் வாசலின் வெளியே நின்ற யானையின் தலையை வெட்டி அதனை விநாயகரின் கழுத்தில் ஒட்டவைத்து உயிர் கொடுத்ததாக சிவபுராணம் கூறுகிறது.
பார்வதி கருவுற்றிருக்கையில் ஒரு அரசன், கருப்பையில் காற்று வடிவமாகச் சென்று அக்கருவின் தலையை வெட்டிவிட்டு சென்றதாகவும், அதற்கு பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தை பெற்றுக் கொண்டதாக விநாயகர் புராணம் கூறுகிறது. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்கு சிவன் தனது மூத்த மகன் விநாயகரை அனுப்பி யுத்தம் செய்ததாகவும், அதில் விநாயகர் வெட்டுண்டு இறந்ததாகவும், போய் பார்த்ததில் தலையைக் காணாமல் வெறும் முண்டம் மட்டும் கிடந்ததால், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி உயிர்பித்ததாகவும் தக்கயாப்பரணி கூறுகிறது.
பார்வதி தனது உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்தூவாரத்திலுள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாள் என்றும், இதன் விளைவாக மாலினி குழந்தை ஒன்றினைப் பெற்றதாகவும் அக்குழந்தையை பார்வதி எடுத்துச் சென்றதாக பிரம்மவை வர்த்தப் புராணம் கூறுகிறது. விநாயகர் தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றுக்குள் புகுந்து குழந்தையின் தலையை கடித்துத் தின்றுவிட்டதாகவும், பிறந்த குழந்தை தலையில்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலைக்கொண்ட கஜாசுரன் என்ற இராட்சன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக்கொண்டது என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.
இந்த கதைகளில் எது உண்மையானக் கதை என்பதனை யாரும் இதுவரை வரையறுத்துக் கூறவில்லை. இதனால் கதை சம்பந்தமான விமர்சனங்களும் கருத்துக்களும் தொடர்ந்து நீடித்த வண்ணமாக உள்ளது. அதைப்போன்று விநாயகருக்கு சித்தி, புத்தி, வல்லபை மற்றும் விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளான மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை என 15 மனைவியர் இருந்ததாக புராணங்கள் கூறுகிறது. அதே வேளையில் விநாயகர் தனது தாய் பார்வதி போன்று மனைவி வேண்டுமென்று கூறியதாகவும், அப்படியொரு அழகான மனைவி கிடைக்கவில்லையென்றும் இதனால் அவர் குளங்களிலும் ஆறுகளிலும் குளிக்க வருகின்ற எந்தப் பெண்ணாவது தனது தாயைப்போன்று இருக்கிறரா என்று பார்க்கச் சென்றதாகவும், அதன் அடிப்படையில்தான் விநாயகர் கோவில்கள் குளக்கரைகளிலும் ஆற்றோரங்களிலும் அமைக்கப்படுவதுமான கருத்துக்களும் மக்கள் மத்தியில் வியாபித்துள்ளன.
சமீப காலங்களாக விநாயகருக்கு மவுசு கூடியுள்ளது. இதற்கு காரணம் இந்து கோவில்களிலும், வீட்டுக் கன்னி மூலைகளிலும் விநாயகர் சிலைகள் வைத்திருந்தால் எந்த வினையும் அண்டாது என்கிற கருத்து மக்கள் மத்தியில் புதிதாக விதைக்கப்பட்டதாகும். இருப்பினும் தமிழ் உணர்வுள்ள இந்துக்கள் இதனை முழுமையாக எதிர்க்கின்றனர். ஏனெனில் நமது கோவிலுக்குள் விநாயகர் நுழைந்து விட்டால், அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் வரும், ஐயர் நுழைவு வரும், சமஸ்கிருத மந்திரம் வரும், சர்க்கரைப் பொங்கல் வரும், பிள்ளையார் ஊர்வலம் வரும், அதனைத் தொடர்ந்து கலவரங்கள் வரும் என்பதாகும். தமிழ் கடவுளான முத்தாரம்மனும் மாடசாமியும் சொள்ளமாடனும் இசக்கியும் காணாமல் போவார்கள் என்பது அவர்களின் நியாயமான வருத்தமாக இருக்கிறது. இதற்கு விநாயகர் காரணமில்லை என்பது மட்டும் உண்மை.
செப்டம்பர் 18, 2010 அன்று சென்னையை அடுத்த நெற்குன்றம் மூகாம்பிகை நகரில் 5 அடி உயர விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்டத் தகராறில் 30 வயதான இந்து முன்னணிப் பிரமுகர் காண்டீபன் தனது நண்பர்கள் சதீஷ், செந்தில், ஈஸ்வரன் ஆகியோர் துணையுடன் 25 வயதான இந்து முன்னணிப் பிரமுகர் பிரபாகரனை பீர்பாட்டிலால் கழுத்து, வயிறு, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். தற்பொழுது இரு குடும்பங்களும் அநாதையாக தெருவில் நிற்கிறது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தவர் பகீர் அஹம்மத். இவர் தண்டையார்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரு சக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அவரை தலை, உடல் மற்றும் முகத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க தனிப் போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஜோ. தமிழ்ச்செல்வன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment