Oct 30, 2010

மன்மோகன் சிங்: மக்கள் பிரதிநியா? பண முதலைகளின் எடுபிடியா?


பட்டினியோடு போராடி வரும் ஏழைகளுக்கு அரசின் தானியக் கிடங்குகளில் கெட்டுப் போகக்கூடிய நிலையிலுள்ள உணவு தானியங்களை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ மைய அரசு வழங்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைக் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் கொதித்துப் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். உணவு மானியம் உள்ளிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்து மானியங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழித்துக்கட்டி வரும் மன்மோகன் சிங்கிற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது ஏற்பட்ட வெறுப்பு புரிந்துகொள்ளத்தக்கதுதான். “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” எனக் கூறி, நீதிபதிகளின் அத்துமீறலை இடித்துக் காட்டினார் மன்மோகன் சிங்.

‘‘நாயும் பன்றியும் தெருவில் சுற்றலாம்; ஆனால், பஞ்சமன் தெருவில் நுழையக் கூடாது” என்ற பார்ப்பன நீதியைப் போல, ஒரு உணவுக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறார், மன்மோகன் சிங். “உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழியும் தானியங்களை இந்திய எலிகளும் ஐரோப்பிய மாடுகளும் தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமாட்டோம்” என்பதுதான் அவரது கொள்கை.

மன்மோகன் சிங் சொல்லாமல் விட்டுவிட்ட இந்தக் கொள்கையை அவரது உணவு அமைச்சர் சரத் பவார் வெளிப்படையாகக் கூறினார். “அரசு ஏற்கெனவே உணவு மானியமாக 66,000 கோடி ரூபாயைக் கொடுத்து வருகிறது. இதற்கு மேல் எப்படி இலவசமாகத் தரமுடியும்?” இந்த உணவு மானியத்தை இந்திய எலிகளும் கடத்தல்காரப் பெருச்சாளிகளும் பங்கு போட்டுக் கொள்ளலாம் ஆனால், மன்மோகன் சிங் கும்பலைப் பொருத்தவரை தற்பொழுது கொடுக்கப்படும் உணவு மானியமே அதிகம் என்பதும், இதை வெட்ட வேண்டும் என்பதும்தான் கொள்கை.

மைய அரசிடம் தற்பொழுது 6 கோடி டன்னுக்கும் அதிகமாக அரிசியும், கோதுமையும் கையிருப்பில் இருக்கிறது. “இது வழக்கமாக அரசிடம் இருக்க வேண்டிய கையிருப்பைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றும், இதில் 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப்போய்க் கிடப்பதாகவும்” சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்திய உணவுக் கழகத்திடம் போதிய கிடங்குகள் இல்லாததால்தான், வெறும் 55,000 டன் உணவு தானியங்கள் மட்டுமே கெட்டுப் போயிருப்பதாக அரசு உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருக்கிறது.

திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தைப் பசியோடு போராடும் ஏழைகளுக்கு ரேசன் கடைகளின் மூலம் வழங்குவது வீண் செலவாம்; அதே சமயம், ஏழை மக்களுக்குப் பயன்படாத இந்தக் கையிருப்பைத் தனியார் கிடங்குகளில் சேமித்து வைக்க – பதுக்கி வைக்க என்றும் சொல்லலாம் – வாடகையைக் கொட்டி அழுவது ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கையாம்! இப்படிப்பட்ட நிலைமை வரக்கூடும் என முன்னறிந்துதான் என்னவோ, மன்மோகன் சிங் அரசு மார்ச் மாதம் போட்ட பட்ஜெட்டிலேயே, தனியார் கிடங்கு களுக்கான குத்தகை கால வரம்பை உயர்த்தும் கொள்கை முடிவைத் தீர்க்க தரிசனத்துடன் எடுத்திருக்கிறது.

இந்த அபரிமிதமான கையிருப்பை, நாயிடம் சிக்கிய தேங்காயைப் போல மன்மோகன் சிங் தனியார் கிடங்குகளில் வைத்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இந்தக் கையிருப்பை முன்னரே விநியோகித்திருந்தால், அதைப் பாதுகாப்பதற்குச் செலவான பணமும் அரசுக்கு மிச்சமாகியிருக்கும்; தானியங்களும் கெட்டுப் போயிருக்காது என்ற சாதாரண உண்மை பொருளாதார அறிஞரான மன்மோகனுக்குத் தெரியாமலா போய்விட்டது?

No comments: