இஸ்லாமாபாத், செப். 16: பாகிஸ்தான் கடற்படைக்கு "எப்-22பி பிரிகேட்' என்ற அதிநவீன போர்க் கப்பலை சீனா வழங்கியுள்ளது. ஏற்கெனவே இதே வகையைச் சேர்ந்த இரண்டு போர்க் கப்பல்களை 2009, 2010-ல் பாகிஸ்தான் கடற்படைக்கு சீனா வழங்கியுள்ளது.பாகிஸ்தான் கடற்படைத் தலைமை தளபதி பஷீர், ஷாங்காய் நகரில் 3-வது போர்க்கப்பலை புதன்கிழமை ஆய்வு செய்தார். பின்னர், அந்தக் கப்பல் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
இந்த போர்க்கப்பல் மூலம் தெற்காசியப் பிராந்தியத்தில் பாகிஸ்தானின் ராணுவ பலம் மேலும் அதிகரித்திருப்பதாக தளபதி பஷீர் தெரிவித்தார்.பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே அனைத்து துறைகளிலும் நல்லுறவு நீடிப்பதாகவும், குறிப்பாக பாதுகாப்பு துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதி நவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ள இந்த கப்பலின் மூலம் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கையும், தரையிலிருந்து விண்ணில் பறக்கும் இலக்கையும் தாக்கி அழிக்க முடியும். முதல் போர்க் கப்பலுக்கு பிஎன்எஸ் சயீப், 2-வது கப்பலுக்கு பிஎன்எஸ் ஜில்பிகர், 3-வது போர்க்கப்பலுக்கு பிஎன்எஸ் சமீர் என பெயரிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்காக 4 போர்க்கப்பல்களை தயாரித்து வழங்க 2005-ல் சீனாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 3 போர்க்கப்பல்கள் சீனா வழங்கியுள்ளது. இவை மூன்றும் சீனாவின் ஷாங்காய் நகரில் வடிவமைக்கப்பட்டவை. நான்காவது போர்க்கப்பல் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உருவாக்கப்பட்டு வருகிறது. 366.5 அடி நீளமும், 2000 டன் எடையும் கொண்ட "எப்-22பி பிரிகேட்' கப்பல் போர்க்களத்தின் முன்னணியில் நின்று தாக்குதல் நடத்தக்கூடியவை. இதேபோல் மேலும் 4 போர்க்கப்பல்களை தயாரித்து வழங்க பாகிஸ்தான் தரப்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment