Aug 23, 2010

அமெரிக்ககாரன் ‘சுதந்திரமாக’ வாழ, ‘இந்தியர்களை’ கைது செய்யும் களவாணிகள்.


அமைதிப் பூங்காவான’ தமிழகத்தின் தலைநகரான சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், அதுவும் ஆகஸ்ட் 15 – 64வது ‘சுதந்திரதினத்தில், ஆயிரம் அடி சுற்றளவுக்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. காரணம், மகஇக, விவிமு, புமாஇமு, புஜதொமு, பெவிமு ஆகிய அமைப்புகள் அறிவித்திருந்த முற்றுகை போராட்டம். அதுவும் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ‘டெள’ கெமிக்கல்ஸ் நிறுவனத்தை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்லி இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் நடத்தப் போவதாக அறிவித்திருந்த முற்றுகை போராட்டத்தை முறியடிப்பதற்காகத்தான் இந்த அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு.

அதாவது அமெரிக்ககாரன் ‘சுதந்திரமாக’ வாழ, ‘இந்தியர்களை’ கைது செய்ய, ‘இந்திய’ சுதந்திரதினத்தில், ‘இந்திய’ அரசின் அனுமதியுடன், தமிழக காவல்துறை அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.இந்த ஆரம்பப் புள்ளியே 64ம் ஆண்டு சுதந்திரதினம் யாருக்கு என்பதை தெளிவாக உணர்த்திவிட்டது. ஏகாதிபத்தியத்துக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவர்களது அடிவருடிகளான இந்திய தரகு முதலாளி வர்க்கங்களுக்கும்தான் சுதந்திரம். அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கல்ல என்பதை நிரூபித்துவிட்டது.

25 ஆண்டுகளுக்கு முன் போபாலில் நிகழ்த்தப்பட்ட படுகொலையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி உழைக்கும் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் ஊனமாகியிருக்கிறார்கள். இன்றும் அந்த மக்களின் ‘வம்சம்’ ஊனத்துடனேயே பிறக்கிறது. அவர்களுக்குரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இந்தப் படுகொலை சம்பவத்துக்கு காரணமான ஆண்டர்சனை கைது செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்து அவனை தப்பிக்க விட்ட காங்கிரஸ் தலைமை தண்டிக்கப்பட வேண்டும்.

‘யூனியன் கார்பைட்’ நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கும் ‘டெள கெமிக்கல்ஸ்’ தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்கும் ‘இந்தியப் பிரதமர்’ மன்மோகன் சிங்கையும், உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளோடு தோழர்கள் சென்னையின் காசி தியேட்டர் இடத்தில் குவிந்தார்கள்.

தொடர்ந்து மறுகாலனியாக்கத்தால் நம் நாடு திவாலாகி வருவதை குறித்து பேசிய தோழர் மருதையன் , இந்த முற்றுகைப் போராட்டத்தை தடுப்பதன் மூலம், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சுதந்திரம் கிடைத்திருக்கிறது… மக்களுக்கல்ல என்றார்.
இதனையடுத்து மீண்டும் தொடர் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்தும் பேனர்களையும், தட்டிகளையும் ஏந்தியபடி செஞ்சேனை தோழர்கள் தாம்பரம் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரமாக நிற்க ஆரம்பித்தார்கள். இதன் மூலமாக சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒவ்வொருக்கும் பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படும் அவலங்களும், போபால் படுகொலையில் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளும் உணர்த்தப்பட்டன. ‘தயவுசெஞ்சு அரெஸ்ட் ஆகிடுங்க… இல்லைனா எங்களுக்கு வேலை போயிடும்…’ என காவல்துறை உயரதிகாரியின் கெஞ்சலுடன் செஞ்சேனை தோழர்களை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்ற ஆரம்பித்தனர்.

No comments: