பெங்களூர்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் வாழும் கலை ஆசிரமத்தில் மர்ம மனிதன் துப்பாகிச் சூடு நடத்தினான். அது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை கொல்ல நடந்த தாக்குதல் என்று ஆசிரமம் கூறினாலும், அதை பெங்களூர் போலீசார் மறுத்துள்ளன்ர். குறி வைக்கப்பட்டது ரவிசங்கர் அல்ல என்றும், அது சீடர்களுக்குள் நடந்த மோதலில் வேறு யாருக்கோ குறி வைக்கப்பட்ட தாக்குதல் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் இதையே தெரிவித்துள்ளார். பெங்களூர் புறநகர் பகுதியில் கனகபுரா சாலையில் தலகட்டபுரா என்ற இடத்தில் ரவிசங்கரின் வாழும் கலை ஆசிரமம் உள்ளது. நேற்று மாலை ஆசிரமத்தில் சத்சங் சொற்பொழிவு நடந்தது. ரவிசங்கர் உரையாற்றிய இந்தக் கூட்டத்தில் சுமார் 8,000 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும், மாலை 6.30 மணி அளவில் ரவிசங்கர் அங்கிருந்து, காரில் புறப்பட்டார். காரை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்றனர். கார் சென்ற பின் பக்தர்கள் கூட்டத்தில் இருந்த மர்ம மனிதன் ஒருவன் திடீரென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினான். அந்த குண்டு வினய் என்ற சீடரின் தொடையை உரசிச் சென்றது. காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ரவிசங்கரின் கார் புறப்பட்டுச் சென்று 5 நிமிடத்துக்குப் பின்னர் தான் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது தெரியவந்தது. இதனால் இது ரவிசங்கருக்கு வைக்கப்பட்ட குறி அல்ல என்றும், வேறு யாருக்கே வைக்கப்பட்ட குறி என்றும் கர்நாடக காவல்துறை டிஐஜி அஜய்குமார் சி்ங் கூறியுள்ளார்.
இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,
ரவிசங்கரின் கார் சென்ற பின்னர் தான் துப்பாக்கிச் சூடே நடந்துள்ளது. இதனால் இது அவரது சீடர்களுக்குள்ளான மோதலில் நடந்த துப்பாக்கிச் சூடாக இருக்கலாம். ரவிசங்கரைக் கொல்ல இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறுவது தவறு என்றார்.
ஆசிரமத்துக்கு கூடுதல் பாதுகாப்பு-கண்காணிப்பு கேமரா: இந் நிலையில் ரவிசங்கரின் ஆசிரமத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரவிசங்கருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்சி சூடு சம்பவம் தொடர்பாக தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டது. சுடப்பட்ட தோட்டாவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆசிரமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்களை சோதனை செய்து அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment