May 5, 2010

ஐஸ்லாந்து நாட்டில் மீண்டும் எரிமலை வெடிப்பு!: விமான போக்குவரத்து பாதிப்பு.

ஐஸ்லாந்து நாட்டில் மீண்டும் ஒரு எரிமலை வெடித்தது. இதனால் விமான போக்குவரத்துத் திரும்பவும் தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் ஐஸ்லாந்தில் உள்ள ஒரு பெரிய எரிமலை வெடித்ததால், பாரிய புகை மூட்டம் எழுந்து வான்வெளியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் இருந்து வெளியான குழம்பு சாம்பலாக மாறி காற்றில் பரவியது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இங்கிலாந்தில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன. பின்னர் நிலைமை சீரானது; மீண்டும் விமான போக்குவரத்து ஆரம்பமானது.

இந்த நிலையில் ஐஸ்லாந்து நாட்டில் மீண்டும் ஒரு எரிமலை வெடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலிருந்து வெளியான குழம்பின் சாம்பல் காற்றில் பரவியுள்ளது. அது பக்கத்து நாடுகளான ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கும் பரவியது. இதனால் வானில் விமானங்கள் பறக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து நாடுகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

எரிமலையின் சாம்பல் தற்போது இங்கிலாந்து நாட்டின் விண்ணிலும் பறக்கிறது. இதனால் அங்கும் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால், பெரும்பாலான பயணிகள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்கின்றனர். இந்த நிலையில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியிருப்பாதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான போக்குவரத்து நடைபெறுகிறதா என விமான நிறுவனங்களில் தகவல் கேட்ட வண்ணம் உள்ளனர்.

No comments: