Jan 24, 2016

எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம்”!

ஹைதராபாத் பல்கலைக் கழகம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலையே!

ரோகித் வெமுலா – ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு முனைவர் பட்டப் படிப்பு மாணவர். இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் முன்னணியாளர்களில் ஒருவர். இந்தப் பல்கலையில் சேர்ந்ததில் இருந்தே அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து மாணவர்களை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட போது அதனை எதிர்த்து பல்கலைக் கழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்.

இப்படிப்பட்ட போர்க்குணமிக்க போராளியான ரோகித் வெமுலா, கடந்த ஞாயிற்றுக் கிழமை (17-01-2016) அன்று தனது நண்பரின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக போராடுபவர்களை எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடக்கி, ஒடுக்கி, அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது என்பதற்கு நம் கண் முன் நிற்கும் உதாரணம் தான் ரோகித் வெமுலா.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முசாபர் நகர் குறித்த ஆவணப் படத்தை டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் திரையிட்ட போது அவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி காலிகளைக் கண்டித்தும், யாகூப் மேமன் தூக்கைக் கண்டித்தும், ரோகித் வெமுலா, தோந்தா பிரசாந்த், விஜய்குமார், சேசு செமுடுகுண்டா மற்றும் சுன்கன்னா ஆகிய 5 மாணவர்களும் முன்னணியாக இருந்து அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு எதிராக இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காலிகள் என்று தமது முகநூலில் சாடியிருக்கிறான் அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்து ஏ.பி.வி.பி நிர்வாகி சுசீல் குமார்.
இதனைக் கண்டித்து இந்த 5 மாணவர்களும் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு அதிகாரி முன்னிலையில் சுசீல் குமாரை அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் மன்னிப்புக் கோர வைத்திருக்கின்றனர். பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய சுசீல் குமார், மறுநாள் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா என்ற அமைப்பில் உள்ள தனது சகோதரனுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் சுமார் 40 பேர் திரண்டு வந்து தங்கள் இருவரையும் தாக்கியதாகப் பொய்ப்புகார் அளித்திருக்கிறான். இதை நிரூபிப்பதற்கு இவர்கள் வேண்டுமென்றே மருத்துவமனையிலும் சேர்ந்துள்ளனர்.
இந்த நாடகங்களின் அரங்கேற்றத்திற்குப் பிறகு உள்ளூர் பா.ஜ.க பிரமுகரான ராமச்சந்திர ராவின் அழுத்தத்தின் பேரில் அப்போதைய பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.பி.சர்மா இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பேராசிரியர் அலோக் பாண்டேயின் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். இந்தக் குழு விசாரித்து அளித்த அறிக்கையில், இப்பிரச்சினை சுசீல் குமார் மன்னிப்புக் கடிதம் கொடுத்த போதே எவ்வித அசம்பாவிதமும் இன்றி முடித்துக் கொள்ளப்பட்டது என்றும் சுசீல் குமாரின் உடலில் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளனர். 
இதனைப் பெற்றுக் கொண்ட நிர்வாகம் விசாரணைக்குழு அறிக்கையை நிராகரித்து விட்டு 5 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக் கழக மாணவர்கள் போராடத் தொடங்கியவுடன், அப்போதைய துணை வேந்தர் ஆர்.பி.சர்மா வேறு வழியின்றி அம்மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்து விட்டு, அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பலை சமாதானப்படுத்தும் வகையில் மற்றொரு விசாரணைக் கமிட்டியையும் நியமித்தார். அதோடு ஜூன் மாதம் முதல் இம்மாணவர்களுக்கு வர வேண்டிய கல்வி உதவித் தொகை பல்கலைக்கழக நிர்வாகத்தால் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது.
மாநில பா.ஜ.க எம்.பி.யும், மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா, அரசு முத்திரை கொண்ட தனது அலுவலக லேட்டர் பேடில் தேசத்தின் பாதுகாப்பிற்கு எழுந்த பிரச்சினையாக சித்தரித்து ஒரு கடிதத்தை மத்திய ’மனித’ வளத்துறை அமைச்சர், ’(போலி சான்றிதழ் புகழ்)’ ஸ்மிருதி இரானிக்கு எழுதியுள்ளார். உடனடியாக களத்தில் இறங்கிய மனித வளத்துறையின் பார்ப்பனக் கும்பல், இதற்கு விளக்கமளிக்குமாறு செப். 3 அன்று ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது. இப்பிரச்சினை குறித்து அப்போதைய நிலையை விளக்கி பல்கலைக்கழகம் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் திருப்தி அடையாத மத்திய மனித வளத்துறை அமைச்சகம் பண்டாரு தத்தாத்ரேயாவின் புகாரின் அடிப்படையில் அந்த மாணவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ச்சியாக செப்டெம்பர் 24, அக்டோபர் 6, 20 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் கடிதங்கள் அனுப்பி அழுத்தம் கொடுத்தது.
இந்நிலையில் துணை வேந்தராக இருந்த ஆர்.பி.சர்மாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காவிக் கூட்டத்தின் ஆசி பெற்ற அப்பாராவ் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் அடிமை அப்பாராவ் பதவியேற்றதும், எவ்வித விசரணையும் இன்றி இந்த 5 மாணவர்களையும் விடுதியில் இருந்து வெளியேற்ற கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி உத்தரவிட்டார். வெளியேற்றப்பட்ட இம்மாணவர்கள் கடுங்குளிரில் விடுதிக்கு வெளியே பல்கலை வளாகத்திற்குள்ளேயே தொடர்ச்சியாகத் தங்கி இவ்வுத்தரவிற்கு எதிராகத் தமது போராட்டத்தை நடத்திய இம்மாணவர்கள் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி துணைவேந்தருக்கு பலமுறை கடிதம் அனுப்பியிருக்கின்றனர். அவர்களது அனைத்து கடிதங்களையும் நிராகரித்தார் அப்பாராவ்.
கடந்த டிசம்பர் 30 அன்று தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து யூ.ஜி.சி.யின் முன்னாள் தலைவர் ’தொரட்’டிடம், தாங்கள் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட 10 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர் இந்த மாணவர்கள். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் தங்களை விடுதியில் தங்க அனுமதிக்காத அப்பாராவிற்கு ரோகித் எழுதிய கடைசிக் கடிதத்தில் ”தலித் மாணவர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்டது பொய்ப்புகார் என்று தெரிந்தும் எங்கள் மீது நடவடிக்கை எடுத்ததை வைத்தே உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படி எங்களை படிப்படியாகக் கொல்வதற்குப் பதில், தலித் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அவர்களுக்கு தாம்ப்புக் கயிறோ, 10 கிராம் சோடியம் அசைடு விஷத்தையோ கொடுத்துவிடுங்கள் அல்லது ஒரேடியாக கருணைக் கொலை செய்து விடுங்கள்” என்று எழுதியிருக்கிறார். மத்தியில் ஆளும் பார்ப்பன பாஜக அரசின் நேரடி அழுத்தம், அப்பாராவ் என்ற அடிமையின் வாயிலாக போராளிகளை எந்த அளவிற்கு உளவியல் ரீதியில் பாதித்திருக்கிறது என்பதை இக்கடிதத்தின் வாயிலாகப் புரிந்து கொள்ள முடியும்.
ரோகித் வெமுலாவின் கடைசி வரிகள்: ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே… “
ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒரு மனிதன் எப்போதாவது அவனது கருத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை. “
“சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது.
”எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம்”
ஹைதராபாத் மத்திய பல்கலைகழக மாணவர் ரோகித்தை போன்று இன்னொரு மாணவரை இழக்கக்கூடாது என்றால் ஆ.எஸ்.எஸ் பார்ப்பன பயங்கரவாத கும்பலை நாட்டு விட்டு விரட்டியடிக்கவேண்டும்.
நன்றி: வினைசெய் வினவு. 

No comments: