Jun 9, 2014

ஈழத்தமிழர்களின் இந்திய நிலை!

JUNE 09/2014: இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்று அகதிகளாக தங்கியிருப் போரின் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதிலும் பிறப்பை பதிவு செய்வதிலும் ஏற்பட்டிருக்கும் தாமதத்தால், குழந்தைகள் உட்பட சுமார் 17000க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தற்போது நாடற்றவர்களாக இருக்கும் சூழல் நிலவுகின்றது. 
தமிழகத்தின் 25 மாவட்டங்களில் அமைந்திருக்கும் 110 முகாம்களில் தற்போது 66,000 அகதிகள் வசிக்கின்றனர். சுமார் 34 ஆயிரம் பேர் அரசிடம் பதிவுசெய்துகொண்டு, முகாம்களுக்கு வெளியில் வசிக்கின்றனர். இதுதான் ஈழத்தமிழர்களின் இந்திய நிலை.  இந்திய அரசு பயங்கரவாதம்  தொடர்ந்து தமிழர்களின் நலன்களை புறக்கணித்தே வருகிறது. 
தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் வாழும் சுமார் 70,000 ஈழ அகதிகள் கைதிகளைப் போலக் கண்காணிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாது முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் பெண்களை கியூ பிரிவு உளவுத்துறை போலீசார் வல்லுறவுக்கு ஆளாக்குவதும், மனைவியை அனுப்ப மறுக்கும் கணவன் மீது பொய்வழக்கு போடுவதும், முகாம்களுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையங்களின் அதிகாரிகள் கேட்கும் போதெல்லாம், அவர்களுக்குத் தேவைப்படும் வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை “அனுபவிப்பதற்கு” ஆள் அனுப்ப வேண்டியதிருப்பதும் ஈழத்தமிழ் அகதிகள் தமிழகத்தில் அனுபவித்து வரும் துன்பங்களாகும்.
ஐரோப்பிய நாடுகள்  அகதிகளாக சென்ற தமிழர்களுக்கு குடியுரிமை கொடுத்து தங்கள் நாட்டு பிரஜைகளாக ஏற்று கொண்டது. ஆனால் ஆறரை கோடி தமிழர்களை தன்னகத்தே கொண்ட இந்திய அரசோ  அதே தமிழ் இனத்தை சேர்ந்த மக்களை, அகதிகள் முகாம் என்கிற திறந்தவெளி சிறையில் அடைத்து துன்புறுத்துகிறது. இதுதான் இந்தியா தமிழர்களுக்கு கொடுக்கும் உரிமை, மரியாதை. 

No comments: