Jul 2, 2012

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு?


புதுடெல்லி: வட்டியில்லா கடன் வழங்கி ஏழைகளுக்கு ஆறுதலை அளித்துவரும் மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் முடிவு சாவு மணியை அடிக்க உள்ளது.
மத்திய நிதியமைச்சகம் கொண்டுவரும் மைக்ரோ ஃபினான்ஸ் மசோதா நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் செயல்படும் வட்டியில்லா வங்கிகள் பூட்டவேண்டிய சூழல் உருவாகும்.
இச்சட்டத்தின் படி வட்டி அடிப்படையிலான மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடியும். அது மட்டுமல்ல லாபத்தை நோக்கமாக கொள்ளாமல் இயங்கும் வட்டியில்லா மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களுக்கு தாங்க முடியாத லைசன்ஸ் ஃபீஸ் கட்டும்படி புதிய சட்டம் கூறுகிறது. பாராளுமன்ற பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா தற்பொழுது நிதி விவகார நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.
மைக்ரோ ஃபினான்ஸ்(சிறுகடன்) நிறுவனங்கள் அனைத்தையும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவர மத்திய அரசு இம்மசோதா மூலம் திட்டமிட்டுள்ளது. மசோதா நடைமுறைக்கு வந்தால் இந்நிறுவனங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கியில் பதிவுச்செய்ய வேண்டும். இதன் மூலம் இந்நிறுவனங்கள் வழிகாட்டுதல்கள், முதலீடு மற்றும் கடனுக்கான வட்டி விகிதத்தை கட்டளையிடும் அதிகாரம் ரிசர்வ் வங்கி வசம் செல்லும்.


இந்த அதிகாரத்தை உபயோகித்து ரிசர்வ் வங்கி, கடன் மற்றும் முதலீட்டின் வட்டி விகிதத்தை தெரிவிக்கவும், ரிடேர்னை ஃபயல் செய்யவும் ஒவ்வொரு மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனத்திடமும் கோரும். அப்பொழுதும் இஸ்லாத்தின் அடிப்படையில் இயங்கும் வட்டியில்லா மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களால் ரிசர்வ் வங்கி கோரும் வட்டி விகிதத்தை தெரிவிக்க இயலாது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் சட்டத்தை பின்பற்றவில்லை என்று கூறி வட்டியில்லா மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களின் லைசன்ஸ் ரத்துச் செய்யப்படும்.
அல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் க்ரெடிட் லிமிட்டடிற்கு (எ.ஐ.சி.எல்)இதே கதிதான் ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்த வங்கியில்லா நிதி நிறுவன மசோதா அமலுக்கு வந்ததுடன் வட்டி விகிதத்தை அறிவிக்க ரிசர்வ் வங்கி கோரியது. அப்பொழுது வட்டியில்லா நிறுவனமாக இயங்கி வந்த எ.ஐ.சி.எல்லிற்கு அது இயலவில்லை. இதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் எ.ஐ.சி.எல்லின் லைசன்ஸ் ரத்துச் செய்யப்பட்டது. இதே ஆபத்துதான் இந்தியாவில் இயங்கும் வட்டியில்லா மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களுக்கு காத்திருக்கிறது.


கேரளாவில் 500க்கும் மேற்பட்ட வட்டியில்லா மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல சொசைட்டி/ட்ரஸ் சட்டத்தின் படி இயங்குகின்றன. சில நிறுவனங்கள் பதிவுச் செய்யப்படாமலும் இயங்குகின்றன. மைக்ரோ ஃபினான்ஸ் மசோதா அமலுக்கு வந்தால் பதிவுச்செய்ய தீர்மானித்தால் வட்டியில்லா மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களால் இயங்க முடியாது. 
கொள்ளை வட்டியை ஏழைகளிடமிருந்து பிழிந்து எடுக்கும் வட்டி அடிப்படையிலான மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய அரசால் கொண்டுவரப்படும் மசோதா, வறுமையில் வாடும் மக்களை வட்டி எனும் அரக்கனிடமிருந்து காப்பாற்ற முயலும் இஸ்லாமிக் மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களை அழிக்க உதவும் என இந்தியன் அசோசியேசன் ஃபார் இஸ்லாமிக் எக்ணாமிக்ஸின்  எக்ஸ்க்யூடிவ் செயலாளர் முஹம்மது சுட்டிக்காட்டுகிறார்.
ரிட்டேன் கோரும் பொழுது வட்டி விகிதத்தை தெரிவிக்கவேண்டும் என்ற சட்டத்தில் இஸ்லாமிக் மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பதே இப்பிரச்சனைக்கான ஒரே தீர்வாகும். லாப நோக்கமற்ற வட்டியில்லா நிறுவனங்களை கடுமையான லைசன்ஸ் தொகையை கட்டுவதில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று முஹம்மது கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: