Oct 18, 2011

"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா" !

"தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவர்க்கோர் குணமுண்டு "

யார் தமிழன்? "அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்"  சொல்லிலும் செயலிலும் அன்பினையே போற்றுவன் தமிழன்.

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினார் சுட்ட வடு."
மறந்தும் மாற்றாரின் மனதினைத் தைக்கும் சொற்களைக் கூறாதவன் தமிழன்.

"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி"  --ஔவையார்.

வருணம் நாலென்றும், இவன் புலையனென்றும், தீண்டல் தகாதென்றும் பிதற்றியோன் தமிழனா ?

இரண்டே சாதி, ஈபவன் உயர்ந்தோன், அதை மறுப்பவன் இழிசாதி. நீதி தவறாது நின்று பொருளீட்டி, ஈட்டிய பொருளில் ஈகையும் மேற்கொண்டு சிறக்க வாழ்பவன் தமிழன்!!

பெண்ணை மதியாமல், மகளையும், இல்லத்துமனுசியையும் கூட மனிதம் துளியுமின்றி சாத்திரச் சாட்டைக்கொண்டு சுழற்றியோன் தமிழனா??

" தையலை உயர்வுசெய் " , பெண்மையின் பெருமையுணர்ந்து பேசுபவன் தமிழன்!!

"கற்பெனில் இருவர்க்கும் பொதுவினில் வைப்போம்" ஒருவனுக்கு ஒருத்தியாய்க் காதலில்களித்து வாழ்பவன் தமிழன்!

பண்பாடு மிக்க மொழி தமிழ். பண்பாடு மிக்க இனம் தமிழ். இதை நாம் காண்பதற்கு பூதக்கண்ணாடி தேவையில்லை. காலக்கண்ணாடி போதும். நம் மொழியின் முன்னைய இலக்கியங்களைப் பார்த்தோமானால் இந்த உண்மையை அறியலாம். அவ்வாறு நாம் அறிய முயல்கின்றபோது -நம் உடலெங்கும் ஒரு கூதல் ஓடும். சட்டெனவே மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கும். இதனை நாம் அனைவரும் உணர்வோம்.

இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களின் முன்னர் நமது தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றனார் ஒரு கவிதை பகன்றார். இந்தக் கவிதை கற்பனையில் கால்கொண்டு உள்ளத்தில் ஊற்றெடுத்து உணர்ச்சிக் கழிப்பில் பெருக்கெடுத்தது அல்ல. பாரம்பரியம் மிக்க நமது மொழியிலிருந்து பண்பாட்டிலிருந்து ஊற்றெடுத்து சுரந்து உடைப்பெடுத்துப் பெருகிறது. கணியன் பூங்குன்றனாரின் சங்ககாலக் கவிதையைச் சொல்கின்றேன்-கேளுங்கள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிஷன்
இன்னாதென்றாலும் இலமே...
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்ததும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே"
இதன் பொருளும் சொல்லவேண்டும் எனில் இதோ:

எல்லா ஊர்களும் நமது ஊர்களே. எல்லோரும் நமது உறவுகளே. தீமையும் நன்மையும் தாமே கொள்வது அல்லாது பிறர் தர வாராது. அவ்வாறே நோவும் அதன் தீர்வும் தாமே வருவன. சாவும் புதியதல்ல. வாழ்வு இனிமை என்று மகிழ்வதும் இல்லை. விரக்தி வந்துற்றபோது கொடுமை என்று வெறுப்பது இல்லை. நம்மை நாமே தெளிவாக உணர்ந்து கொண்டோ ஆதலினால் மாட்சிமை தங்கிய பெரியோரை வியந்து போற்றப் புகழமாட்டோம். அதேசமயம் சிறியோரை இகழ்தல் என்பன ஒருபோதும் செய்யோம்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு கவி தமிழ் மகனிடமிருந்து வருகின்றதென்றால் அது தமிழ்ச் சமூகத்துப் பண்பாட்டுடன் விழுமியத்தின் வெளிப்பாடு அல்லாது வேறு என்ன?

" பெரியோரை வியத்தல் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே "

என்று சொல்ல வேறு எந்த சமூகத்தால் முடிந்திருந்தது?  நமது பண்பாட்டு விழுமியப் பெருக்கின் பெறுபேறு அல்லவா இது! இதனால் பெருமிதம் அடையவேண்டும். ஓர் உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தவறுகள் களைய விமர்சனம் தேவைதான். அது எமக்குள். அது ஒருபுறம் இருக்க நாம் அஞ்சத் தேவையில்லை. நம்மை நான் குறைத்து மதிப்பிடவும் தேவை இல்லை. நம் இனம் தலை நிமிர்ந்து வாழ ஆயிரக்கணக்கில் தம்மைக் கொடையாய் கொடுத்தவர்களின் சமூகம் நமது சமூகம். ஓர் உன்னத சமூகத்தின் வயிற்று மைந்தர் நாம். அதனால் பெருமிதப்படுவோம். நெஞ்சு நிமிர்த்தி வீறுநடை போடுவோம்.

பதினாறு நூற்றாண்டுகளின் முன் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்று சொன்ன சிலப்பதிகாரம் எழுந்த தமிழ்ச்சாதி நமது.

"தன்னிலையில் தாழாமை தாழ்ந்த பின் உயிர் வாழாமை" என்று பதினைந்து நூற்றாண்டுகளின் முன் பாடிய வள்ளுவன் வாழ்ந்த தமிழ்ச்சாதி நமது.

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று பாடியே பன்னிரண்டு நூற்றாண்டுகள் அழிந்து விட்டன. அதுதான் நமது தமிழ்ச்சாதி.

"மானுடம் வென்றதம்மா" என்று மானுடத்தை வியர்ந்து போற்றிய காலம் கழிந்து பத்து நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்ச்சாதிதான் அதைச் சாதித்தது.

"மனிதனுக்கு மேலொன்ருமில்லை
மானுடம் போலொரு மெய்மையுமில்லை".

என்று மனிதரைப் போற்றி ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் பாடிய சாதி நம் தமிழ்ச்சாதி

சொல்லுங்கள்-தமிழ்ச்சாதி என்பது தரக்குறைவா?  விதியை தமிழர் நாம் வெல்வோம். தமிழ்ச்சாதி என்று தலை நிமிர்த்தி தோள் உயர்த்தி நெஞ்சு விரித்து நிமிர்வோம் வானம் அளந்த அனைத்தும் அளப்போம்.

"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா"

ரௌத்திரம் பழகு
...யாழினி..

8 comments:

Anonymous said...

நல்லபதிவு தோழி! சாட்டையால் அடிக்கிறமாதிரி அடிதிருகீன்கள் வாழ்த்துக்கள்! நட்புடன் - மாலதி.

Anonymous said...

நல்லபதிவு தோழி வாழ்த்துக்கள். அன்புடன் - ரேவதி.

Anonymous said...

தமிழர்களின் மரபு என்ன என்பதை ஆவேசமாக சொல்லும் ஒரு பதிவு. நன்றி யாழினி.

by - raja.

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

நிவாஸ் said...

தமிழனின் பெருமையை இந்து தமிழனே உணர்ந்துகொள்ளவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. அருமையான பதிவுங்க. பாராட்டுகள்

Anonymous said...

நல்ல பதிவு


கருத்தோடு கருத்து மோதுவது காஃபிர் குணம்

Anonymous said...

இப்னு சாகிர் விஷ பாம்பு மீண்டும் வந்துவிட்டதா? ஏன்யா குழப்பம் உண்டாகுகிறாய்.

Anonymous said...

வணக்கம் அருள் உங்கள் பதிவை படித்தேன் நன்றாக இருந்தது. நிறைய செய்திகள் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.