May 5, 2011

இந்தியாவில் தமிழ்நாடு இல்லை!! சுப.வீரபாண்டியனின் ஆவேசம்!!

May 6, இந்தியா உதவக் கூட வேண்டாம். குறைந்த பட்சம் இலங்கைக்குத் துணை போகாமலாவது இருக்க வேண்டாமா?

என்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசினார்.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஐ.நா.மனித உரிமை குழு தலைவராக இருந்த ரவிப் பிள்ளை 2009ஆம் ஆண்டே சுட்டிக் காட்டினார்.

இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையை எதிர்த்தது முதலில் ஸ்விட்சர்லாந்து தான். காரணம் அந்த நாடு இராணுவத்தை வைத்துக்கொள்ளாத நாடு போரில் காயமடைவோரை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் காப்பாற்றுகின்ற நாடு.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சொன்னது ஸ்விட்சர்லாந்து. இலங்கைக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்த நாடு இந்தியா.
இந்தியாதான் முதலில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இலங்கைக்கு ஆதரவாக சீனா செயல்பட்டது ரஷ்யா செயல்பட்டது. கியூபாவும், வெனிசுலாவும் இலங்கையை ஆதரித்தது. இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது என்று இந்தியா ஒதுங்கிக் கொண்டது.

மூன்றாயிரம் அமெரிக்கர்களை கொன்றதற்கே 40 நிமிடத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கே தெரியாமல் பின்லேடன் கதையை முடித்தது அமெரிக்கா. மூன்று லட்சத்து முப்பதாயிரம் தமிழர்கள் இலங்கையிலே கொல்லப்பட்டார்களே.

எந்த நாடாவது கேள்வி கேட்டதா? இந்தியாவைச் சார்ந்த தமிழன் கொல்லப்பட்டானே இந்தியா கேட்டிருக்க வேண்டாமா? இந்தியாவில் தமிழ்நாடு இல்லை என்று கருதிவிட்டது. முள்ளி வாய்க்கால் பகுதி போர் அற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதி.

அந்தப் பகுதியில் இருந்த அவ்வளவு தமிழர்களையும் இலங்கை இராணுவம் அழித்தது.
இதைப் பார்க்க ஐ.நா.குழு வருகிறோம் என்று சொன்னால் உங்களுக்குப் பாதுகாப்புத் தர முடியாது என்று இலங்கை சொல்லிவிட்டது.

அதேபோல போரில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வந்த செஞ்சிலுவை சங்கத்தையும் நாட்டைவிட்டே வெளியேறு என்று சொல்லிவிட்டது இலங்கை. எகிப்தில் லிபியாவில் மக்கள், ஆளும் அரசை எதிர்த்துப் போராடினால் அதற்கு அமெரிக்க அரசு ஆதரவு தருகிறது.

காரணம் என்ன? ஈழத்தில் எண்ணெய் வளம் இல்லை. ரத்தம் தான் இருக்கிறது என்ற காரணத்திற்காக அமெரிக்கா ஆதரவு தெரிவிக்க வில்லையா? ஏன் உலக நாடுகள் எதிர்த்தன? விடுதலைப் புலிகளைப் பார்த்து அச்சப்பட்டனர்.

உலகிலேயே மக்களுக்காகப் போராடிய ஒரே ஒரு அமைப்பிற்கு மட்டும் முப்படைகள் இருந்தன. தரைப்படை, விமானப்படை, கப்பற்படை வைத்திருந்த அமைப்பு தம்பி பிரபாகரன் தலைமையில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பு.

தம்பி பிரபாகரன் முப்படைகளையும் வைத்திருந்தததோடு நான்காவது படையையும் வைத்திருந்தார். அது தான் தற்கொலைப் படை. பெண் புலிகளை பெண் தற்கொலைப் படையை வைத்திருந்த ஒரே அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு தான்.

சொந்த மண்ணில் கவுரமாக வாழ நினைத்தார்கள் நிம்மதியாக வாழ நினைத்தார்கள். ராஜபக்சே சொல்கிறார். இந்தியா எங்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கிறது என்று.

இப்படி ராஜபக்சே சொல்லியிருப்பது இந்தியாவுக்கு அவமானம் இல்லையா? குறைந்த பட்சம் இலங்கைக்கு துணை போகாமலாவது. இந்தியா இருக்க வேண்டாமா? ராஜபக்சேவை எப்பொழுது தண்டிக்கப் போகிறீர்கள் என்ற குரல் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடையே ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

உள்ளூர் அரசியலைப் பற்றிப் பேச வேண்டாம். வெறும் ஈழமக்களுடைய பிரச்சினைகளை மட்டும் பேசுவோம் வாருங்கள். இதற்கு எத்தனைக் கட்சிகள் தயாராக உள்ளன? இவ்வாறு சுப.வீரபாண்டியன் பேசினார்.

No comments: