Feb 15, 2011

திருச்செந்தூர் பகுதியில் தலித் மக்கள் மீது போலீஸ் ஆராஜகம்!!!

திருச்செந்தூர் பிப் 15: திருச்செந்தூரில் கடந்த மாதம் 28ம் தேதி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் கடைகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அதை அகற்றும்படி உயர் ஜாதி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அப்போது டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்டதாக கூறி விடுதலை சிறுத்தைகளும் போராட்டத்தில் குதித்தனர். ரோடுகளில் மரங்களை வெட்டி போட்டு தடை ஏற்படுத்தினர். இதனால் திருச்செநதூரில் பதற்றம் ஏற்பட்டதால் இருதரப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே திருச்செந்தூரில் நடைபாதையி்ல் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற கோரி கடந்த 12- ம் தேதி உயர் ஜாதியினர் திருச்செந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். சமீபகாலமாக திருச்செந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள், மறியல் என நடைபெறுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் தூத்துக்குடி ஸ்பெஷல் போலீசார் திருச்செந்தூர் அருகேயுள்ள என் முத்தையாபுரத்துக்கு சென்றனர். அங்கு வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த தலித் சமூகத்தை சேர்ந்த தனுஷ்கோடி, ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக பொய் வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தலித் சமூகத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஊர் கோயில் மணி அடிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் திரண்டனர். இது போல் குலசேகரபட்டிணம் அண்ணா காலனியைச் சேர்ந்த தலித் சமூக ஜான், தோப்பூர் ராஜா, கரம்பவிளை சின்னத்துரை, சதீஷ்முத்து, அசோக் ஆகிய 7 பேரையும் வீடு புகுந்து இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி தலித் சமூக மக்கள் கொதிப்படைந்தனர். இன்று காலை 6 மணி அளவில் கீழநாலுமுலை கிணறு முருகன்குறிச்சி, பரமன்குறிச்சி மெயின்ரோட்டில் தலித் சமூக நூற்றுகணக்கானோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக உடன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் ஜீப் மற்றும் வேனையும் அவர்கள் சிறைபிடித்தார்கள்

No comments: