Jan 2, 2011

பத்து வயதில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவி.


லக்னோ:உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில், 10 வயது மாணவி ஒருவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்கும் தேஜ் பகதூர்-சாயாதேவியின் மகள் சுஷ்மா. தற்போது 10 வயதாகும் இந்த மாணவிக்கு அபூர்வமான கல்வித் திறமை இருப்பது கண்டு, அப்பெண்ணின் பெற்றோர் வீட்டிலிருந்தே படிக்க வைத்தனர். இதனால், தனது ஏழாவது வயதில் 10ம் வகுப்பு தேர்வையும், இந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வையும் எழுதி பாஸ் செய்துவிட்டார். இதையடுத்து, சுஷ்மா லக்னோ பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு படிக்க அனுமதி கேட்டு, லக்னோ பல்கலைக் கழகத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த பல்கலைக் கழகம், சுஷ்மாவுக்கு தற்காலிக அடிப்படையில், அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, உ.பி.,யில் உள்ள கல்லூரி ஒன்றில், பி.எஸ்சி., அறிவியல் பாடத்தில் சுஷ்மா சேர்ந்துள்ளார்.
சுஷ்மாவின் சகோதரன் சைலேந்திரா கடந்த 2007ம் ஆண்டில், தனது 14ம் வயதில் கம்ப்யூட்டர் சயின்சில் பட்டப்படிப்பை முடித்து சாதனை செய்துள்ளான். சுஷ்மாவின் தந்தை தேஜ் பகதூர் தினக்கூலி. தாயார் சாயாதேவி படிக்காதவர். எனினும், தங்களது பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளனர்.

No comments: