Jan 15, 2011

கேணல் கிட்டு!!! தமிழர் விடுதலை வரலாற்றின் வீரகாவியம்.


வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது! அது! வங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத பலத்தால் அதை பாரதக் கப்பல் தன் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்கிறது.

கப்பலில் பயணித்த போராளிகளை சரணடையும்படி கட்டளை பிறக்கிறது! உயிரணைந்து போனாலும் சரணடையாத புலிகள் கட்டளைக்குப் பணிய மறுக்கின்றனர். சரணடையா விட்டால் கப்பலைத் தாக்கப் போவதாக மீண்டும் ஒரு கட்டளை! புலிகளின் முகங்களில் கேலிப்புன்னகை! கப்பல் வெடித்துச் சிதறுகிறது! விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியையும் தோழர்களையும் உயிருடன் பிடித்துவிடலாம் என்ற பாரதத்தின் நப்பாசை கப்பலுடன் சேர்ந்து சிதறிப்போகிறது!

ஆம்! கிட்டுவும் தோழர்களும் வங்கக்கடலில் சங்கமமாகி ஒரு மாபெரும் தியாக காவியம் வீர வரிகளால் எழுதி விட்டனர்! நாம் மூத்த தளபதி கிட்டுவை இழந்தோம்! கிட்டு எதிரிகளைக் கலங்க வைக்கும் ஒரு ஒப்பற்ற வீரத் தளபதி! கிட்டுவின் அணி வருகிறது என செய்தி கிடைத்தாலே சிங்களப் படை அஞ்சிப் பின்வாங்கும் அளவுக்கு அவனிடம் ஒரு ஆளுமை கொப்பளித்தது! களத்தில் கிட்டு இறங்க விட்டால் சக போராளிகளிடம் பலம் பன்மடங்கு பெருகிவிடும்.

கிட்டு ஒரு அரசியல் வாதி!: விடுதலையுணர்வை மக்களுக்கு விதைப்பது, போராட்டப் பணிகளில் மக்களை ஈடுபடுத்துவது, தெளிவான அரசியல் பார்வையை தோழர்களுக்கு ஊட்டுவது, எந்நேரமும் மக்களோடு மக்களாக உறவாடுவது - இவையெல்லாம் அவன் அரசியல் ஆளுமை!

கிட்டு ஒரு ராஜதந்திரி!: இந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்த போது இந்தியாவிலேயே தலைமறைவாக இருந்து கொண்டே எமது போராட்டத் நியாயங்களை வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு விளக்கினான். ஆங்கில வெளியீடுகள் மூலம் பரப்புரை மேற்கொண்டான். இலண்டனில் இருந்து கொண்டு பன்னாட்டு போராட்ட அமைப்புகளுடனும் தொடர்புகளை மேற்கொண்டான்.

கிட்டு ஒரு ஊடகவியலாளன்!: பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி எனப் பல்வேறு ஊடகங்களை ஆரம்பித்து தானே நெறிப்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஊடகப் பலம் சேர்த்தவன் கிட்டு.

கிட்டு ஒரு புகைப்படக் கலைஞன்!: கிட்டுவின் கழுத்தில் என்றுமே இணைபிரியாமல் இருப்பவை இரண்டு. ஒன்று - சயனைட் குப்பி! மற்றது புகைப்படக் கருவி! எந்த நெருக்கடியான சண்டையிலும் அவன் ஒரு கையில் துப்பாகியுடனும் மறுகையில் கமெராவுடனும் நிற்பான். எந்த ஒரு சம்பவத்தையும் அவன் ஆவணப்படுத்த தவறுவதில்லை.

கிட்டு ஒரு ஓவியன்!: அவனின் ஓவியங்களில் கற்பனைகளும் கனவுகளும் சிறகடிக்கும்! ஆத்மார்த்த உணர்வுகள் கொப்புளிக்கும் விடுதலையுணர்வு வீறுகொண்டெழும்" அவனின் ஓவியங்கள் வெறும் படைப்புக்களல்ல! மனிதரை செயல் நோக்கி உந்தித்தள்ளும் விசைகள்!

கிட்டு ஒரு கவிஞன்!: அவனின் கவிதைகளில் மண் மணக்கும்! வல்லை வெளிப் பூவசரசும், உடல் தழுவும் உப்புக்காற்றும் மெல்ல நடை பயிலும். கள்ளிறக்கும் கந்தனும், மீன்பிடிக்கும் மரியானும் சமத்துவம் தேடி அவன் கவிதைகளில் சங்கமிப்பார்கள். காதல் உணர்வு கடல் கடந்தும் சிறகடிக்கும்! இப்படி இப்படியாக கிட்டு ஒரு பன்முக ஆளுமையின் அவதாரம்! ஒரு விடுதலைப் போராட்டத் தளபதியின் தலைசிறந்த முன்னுதாரணம்!

இந்தி அரசே! அந்த அற்புதத்தை வங்கக்கடலில் வைத்து அழித்தாய்! இப்போது கேட்கிறோம்!
அவனை உன்னால் எமது நெஞ்சிலிருந்து அழிக்க முடியமா? எம், இதய நரம்புகளில் இன்றும் விடுதலை உணர்வை மீட்டிக்கொண்டிருக்கும் அவனின் நினைவுகளை அழிக்க முடியுமா?
முடியாது! உன் இலட்சக் கணக்கான படையினராலும் முடியாது! உன் பலம் வாய்ந்த புலனாய்வு அமைப்புக்களாலும் முடியாது!ஏனெனில் - கிட்டு எங்கள் மண்ணில் ஒவ்வொரு துகள்களிலும் உயிர் வாழ்கிறான்!

நன்றி : செண்பகப்பெருமாள்.

1 comment:

PAVITHRAN said...

தளபதி கிட்டு மீது கைக்குண்டு எறிந்த தேசத் துரோகி புளட்டை சேர்ந்த ரஹ்மான்யான் தற்போது கனடாவில் இருக்கிறான். மேலதிக தகவல்களுக்கு "கிட்டு கிறநைட்" என்று "கூகிள்" இல் தேடி பாருங்கள்