கணவன் அடித்தாலும் உதைத்தாலும், அவன் காலடியில் கிடந்து பெண்கள் வாழ்ந்த காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இப்போது, கணவனை பிடிக்கவில்லை என்றால், நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்று, விவாகரத்து பெற்றுச் செல்லும் துணிச்சல் பெண்களுக்கு வந்துவிட்டது. குடும்ப பிரச்னைக்கு பெரும்பாலான மனைவிகள் கூறும் காரணம் ‘வரதட்சணை’. இந்த கொடுமையில் இருந்து அவர்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்டது தான் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம். இது, பெண்களை பாதுகாக்கும் காலம் மாறி, ஆண்கள் பலரை தேவதாஸ்களாக மாற்றி வருகிறது.
குடும்பத்தில் ஏற்படும் சிறு பிரச்னைகளைக் கூட சகித்துக் கொள்ள முடியாத பெண்களில் பலர், இந்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகின்றனர். தங்களுக்கு கீழ்படியாத கணவன்களை வழிக்கு கொண்டு வரவும், தங்கள் பிரச்னைகளை தீர்க்கவும் இந்த சட்டத்தை பயன்படுத்தி மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. அவர்களுடைய உண்மையான பிரச்னை தெரியாமல், காவல் துறையினரும் பெண்களின் வாக்குமூலம் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதுபோன்ற புகார்களை முறையாக விசாரித்த பின்புதான், வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியும் பலன் இல்லை. வரதட்சணை கொடுமையால் உண்மையாகவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த சட்டம் வரப்பிரசாதமாக அமைந்தாலும், தவறாக திசை திருப்பப்படுவது பல குடும்பங்கள் சீர்குலைய காரணமாக அமைகிறது. இதைத் தடுக்க ‘சமூகநல அலுவலகம் மூலம் விசாரித்து, அவர்கள் பரிந்துரை செய்யும் புகார்கள் மீது மட்டுமே காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சமூகநல அலுவலர்கள் பரிந்துரை செய்யும் புகார்கள் மீது மட்டுமே போலீசார் வழக்குப் பதிவு செய்கின்றனர். இதுபோன்ற புகார்கள் சமூக நலத்துறைக்கு வரும்போது, தம்பதிகளின் உண்மையான கேரக்டரை அக்கம்பக்கத்தில் விசாரித்து யார் மீது தவறு உள்ளது என்பதை கண்டுபிடிக்கின்றனர். பின்னர், அதற்கு தகுந்தவாறு கவுன்சலிங் மூலம் திருத்த பார்க்கின்றனர். அப்படியும் வழிக்கு வராதவர்கள் மட்டுமே நீதிமன்றத்தை நாடுகின்றனர். இந்த நடவடிக்கைகளை கடந்து செல்லும்போது யார் மீது தவறு உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இதனால், பொய் புகார்கள் குறைய தொடங்கியுள்ளது.
வரதட்சணை புகார்களில் 95 சதவீதம் பேர் விடுவிப்பு, மனைவி கொடுக்கும் வரதட்சணை புகாரை ஆதாரமாக வைத்து கணவன், தாய், தந்தை மற்றும் குடும்பத்தினரை கைது செய்ய இந்திய தண்டனை சட்டப்பிரிவு 498 (ஏ) போலீசாருக்கு அதிகாரம் அளிக்கிறது. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே என்பதால் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற கைது நடவடிக்கை அதிகரித்து வருகிறது. உச்ச நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வரதட்சணை வழக்குகளில் நிரபராதியாக வெளியே வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2007ம் ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரதட்சணை வழக்குகள் பதிவாகின. இதில் 76 ஆயிரம் வழக்குகளில்தான் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தபட்ட 79 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2008ல் 2 லட்சத்து 16 ஆயிரம் வரதட்சணை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 85 முதல் 95 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பக சர்வேயில் தெரியவந்துள்ளது. பல வரதட்சணை வழக்குகள் ஜோடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment