
சென்ற வருடம் முடிவடைந்த யுத்தத்தின் பின்னர் மூன்று லட்சம் தமிழர்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட காலம் தொட்டே, அந்த முகாம்களுக்குள் பாதுகாப்புப் படையினர் வந்து ஆட்களைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருந்தன. விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிலரை யுத்தம் நடந்த சமயத்தில் பார்த்தோம் ஆனால் அதற்குப் பின்னர் அவர்கள் காணாமல் போயிருந்தனர் என்று அவர்களின் உறவினர்கள் கூறிவருகிறார்கள்.
புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 160 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிரமான முன்னாள் உறுப்பினர்கள் என்றும் இவர்களை யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம்களிலிருந்து கைதுசெய்யதாகவும், தற்போதுவரை இவர்களை பயங்கரவாத விசாரணைத் துறையினர் தடுத்து வைத்திருந்தனர் என்றும் அரச தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நூற்று அறுபது பேரின் பெயர்களும் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டிருந்தது என்றாலும் இவர்கள் சார்பாக வழக்கறிஞர் ஒருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கு பொலிசாருக்கு ஒன்றரை வருட காலம் எடுத்துள்ளது. ஆனாலும் இப்போதாவது சட்ட நடைமுறை ஆரம்பிக்கிறது என்பது வரவேற்கபட வேண்டிய ஒரு செய்திதான் என கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்காக ஆஜராகியிருந்த வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.
போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்கக்கூடிய குழு விரைவில் இலங்கை வந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியம் வழங்க வாய்ப்பு உள்ளது என்பதால்தான் இப்போது இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்கிறார்கள் என இன்னொரு வழக்கறிஞர் கூறுகிறார்
No comments:
Post a Comment