விசாரணையின்போது பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து நடத்துவது, சட்டவிரோத பார் மற்றும் சீட்டாட்ட கிளப்களுக்கு துணை போவது உள்ளிட்ட முறைகேடுகள், கோவை மாநகர போலீசில் அதிகரித்துள்ளன. முறைகேடு போலீஸ் மீது கமிஷனர் கடும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
கோவை மாநகர போலீசில் 15 ஸ்டேஷன்கள் உள்ளன. அடிதடி தகராறு, வாகனத்திருட்டு, குடும்பத் தகராறு, பணத்தகராறு, தற்கொலை, வாகன விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக தினமும் 20 வழக்குகள் வீதம் பதிவாகின்றன. தண்டனைக்குரிய குற்றம் தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட வேண்டுமென்பது, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் விதி. ஆனால், வழக்குப்பதிவு செய்ய மறுப்பதும், பணம் பெற்று வழக்குப்பதிவு செய்வதும், விசாரணையின் போது பணம் பறிப்பதும் அதிகரித்துள்ளது. சிவில் விவகாரத்தில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து நடத்துவது, சட்ட விரோத சீட்டாட்ட கிளப்கள் மற்றும் பார்களுக்கு துணைபோவது, உள்ளிட்ட முறைகேடுகள் தலைதூக்கியுள்ளன. வாகனத்திருட்டு, வீடு புகுந்து திருட்டு, அடிதடி தகராறு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படுவதில்லை. "அதிகாரிகள் இல்லை' எனக்கூறி கூறி வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடிக்கின்றனர். இதனால், பலரும் உதவிக்கமிஷனர், துணைக்கமிஷனர் மற்றும் கமிஷனரிடம் முறையிட்டு நிவாரணம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உயரதிகாரிகளிடம் புகார் அளித்தால் மட்டுமே சட்ட ரீதியான நிவாரணம் கிடைக்கும் எனக்கருதி தினமும் எண்ணற்ற மக்கள், கமிஷனர் அலுவலகத்தில் முறையிட வருகின்றனர். இவர்களிடம் நேரடி விசாரணை நடத்தும் கமிஷனர் சைலேந்திரபாபு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கிறார்.அதன்பிறகே, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கமிஷனரால் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் புகார்களின் மீதும் சில நேரங்களில் உரிய விசாரணை நடப்பதில்லை. "எங்களை மீறி நேரடியாக கமிஷனரிடமா முறையிடுகிறாய்?' எனக்கேட்டு ஆத்திரமடையும் போலீசாரின் ஏக வசனங்களையும், பாதிக்கப்பட்டவர்கள் கேட்க நேரிடுகிறது.
இவ்வாறு, கமிஷனரால் பரிந்துரைக்கப்பட்ட புகார் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல், புகார்தாரரையே மிரட்டிய இரு பெண் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவமும் சமீபத்தில் நடந்திருக்கிறது.எனினும், சில போலீசாரின் அலட்சிய போக்கில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் புகார் மனு மீது இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டால், கமிஷனரிடம் முறையிட வருவோரின் எண்ணிக்கை குறையும். அவ்வாறான விசாரணைகள் நியாயமாகவும், சட்டப்படியும் இல்லாததாலும்தான் கமிஷனரிடம் நேரடியாக முறையிட பலரும் வருகின்றனர். மிகச்சாதாரண பிரச்னைகளில் கூட கமிஷனரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே நியாயம் கிடைக் கும் என்ற எண்ணம் மக்களிடம் வேரூன்றிவிட்டதாகவே தோன்றுகிறது. இது, போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள் மற்றும் உதவிக்கமிஷனர்களின் செயல்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையே காட்டுகிறது. போலீஸ் நிர்வாகத்தில் உயரதிகாரிகள் மட்டும் பொறுப்புடன் பணியாற்றினால் போதாது. களப்பணியாற்றும் போலீசாரும், மேற்பார்வை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் பொறுப்புடன் செயலாற்றினால் மட்டுமே மக்களின் நன்மதிப்பை பெறமுடியும். ஆனால், துரதிஷ்டவசமாக அதற்கான வாய்ப்புகள் நகரில் குறைந்து வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment