Dec 28, 2010

பா.ஜ.கவின் அனந்தகுமார் மீது தேசத்துரோக வழக்கு - மத்திய அரசு!

டிச.29:இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை ஊழலில் சர்ச்சைக்குரிய இடைத்தரகர் நீரா ராடியாவுடன் பா.ஜ.க தலைவர் அனந்தகுமாருடைய உறவுக் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபொழுது விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராகயிருந்தவர் அனந்தகுமார். அக்காலக்கட்டத்தில் நீரா ராடியா அதிகார வட்டாரங்களில் தீவிர செல்வாக்குடையவராக திகழ்ந்தார் என்ற குற்றச்சாட்டைக் குறித்து விசாரணை நடத்தப்படும் என பாராளுமன்ற விவகார துணை அமைச்சர் வி.நாராயண சுவாமி தெரிவித்தார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அனந்தகுமாருக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவுச்செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என நாராயண சுவாமி தெரிவித்தார்.

லண்டனிலிருந்து கடந்த 1990களில் இந்தியாவிற்கு வந்த நீரா ராடியாவுக்கு அதிகார மையங்களில் வழிகாட்டியது பா.ஜ.கவின் அனந்தகுமார் என ராடியாவின் முன்னாள் வர்த்தக கூட்டாளி ராவு தீரஜ்சிங் வெளியிட்டத் தகவல் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. ராடியாவுக்கு விமானப் போக்குவரத்துறையில் நுழையவும், இத்துறையில் நிறுவனங்களின் மக்கள் தொடர்பு விவகாரங்களை கையாளவும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது அனந்தகுமார் எனவும், அமைச்சரவைக் கூட்ட விபரங்கள் வரை ராடியாவிடம் அனந்தகுமார் கசிய விட்டார் எனவும் தீரஜ்சிங் குற்றஞ்சாட்டியிருந்தார்.

செய்தி:தேஜஸ்

No comments: