Nov 18, 2010

அதிகரித்துவரும் இடைவெளி - வாழ்க இந்திய ஜனநாயகம்!

77 சதவீத இந்தியர்கள் தினசரி இருபது ரூபாய் கூட வருமானமில்லாதவர்கள் என அர்ஜூன்சென்குப்தாவின் அறிக்கைக் கூறுகிறது. ஐம்பது சதவீத இந்தியர்களும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாக என்.சி.சக்ஸேனாவின் அறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.

இல்லை! இல்லை!, 37 சதவீத இந்தியர்கள்தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாக டெண்டுல்கர் கமிட்டி அறிக்கை கூறுகிறது. திட்டக் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டது என்ற அடிப்படையில் டெண்டுல்கர் கமிட்டி அறிக்கை இந்திய குடிமக்களின் வாழ்க்கை முறையினை படம் பிடித்துக் காட்டுவதைக் காண்கிறோம்.

வறுமைக்கோட்டிற்கு சற்று மேலே உள்ளவர்களெல்லாம் சுகமான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்பது இவ்வறிக்கைகளின் பொருளன்று. வாழ்க்கையை ஓட்டுவதற்கு சிரமப்படும் பெரும்பாலான நடுத்தர மக்களின் நிலைமையை இந்தியா முழுவதும் பயணித்தால் காண இயலும். ஓர் அடி நிலத்திற்காக உயிரைக் கொடுக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் ஆதிவாசிகளின் இரத்தத்திலும் கண்ணீரிலும்தான் நமது தேசம் 64-ஆம் சுதந்திர தினத்தை கொண்டாடியது.

குடிநீர், மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் கோடிக்கணக்கான இந்தியர்கள் இரவில் தூங்குவது தெருக்களிலாகும். ஆனால் இவையெல்லாம், எதற்கெடுத்தாலும் பாராளுமன்றத்தை அமளி துமளியாக்கும் எம்.பிக்களுக்கோ மூவர்ணக் கொடியை தாங்கி வாகனங்களில் பவனிவரும் அமைச்சர்களுக்கோ ஒரு பிரச்சனையே அல்ல.

அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இந்தியக் குடிமக்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் என வீம்புப் பேசும் இவர்கள் என்றாவது பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்துள்ளார்களா? அல்லது குறைந்தபட்சம் வெளிநடப்புத்தான் செய்தார்களா? ஆனால், நமது ஏழைகளின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இந்தியா சுதந்திர தினத்தைக் கொண்டாடிய ஆகஸ்ட் மாதத்தில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டது எதற்குத் தெரியுமா? தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சம்பளம் 16 ஆயிரத்திலிருந்து ஐம்பதினாயிரமாக உயர்த்தியது போதாதாம். 80 ஆயிரமாக உயர்த்த வேண்டுமாம். போதிய அடிப்படை வசதிகளின்றி திக்குமுக்காடும் பீகார் மாநிலத்தின் லாலுபிரசாத் யாதவும், தலித் மக்களின் மெசய்யா எனக் கூறப்படும் முலாயாம் சிங்கும்தான் பாராளுமன்றத்தின் அவை நடுவில் சம்பள உயர்வுக்கான போராட்டத்தின் தலைமைத் தாங்கியவர்கள்.

பா.ஜ.கவும், இடதுசாரிகளும் நடப்பது நடக்கட்டும், கிடைத்தால் நமக்கும் லாபம் தானே என பாசாங்குச் செய்தன. அரசியல் வாதிகளுக்கு உலகத்திலேயே அதிகளவில் சம்பளம் கொடுத்து சீராட்டிவரும் சிங்கப்பூர், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு தங்களுக்கு சம்பளம் வேண்டும் என்ற போராட்டத்தில் நமது எம்.பிக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேசத்தில் மிக அதிக சம்பளம் வாங்கும் மூத்த அதிகாரியைவிட ஒரு ரூபாய் அதிகமாக தங்களுக்கு வேண்டும் என்ற பிடிவாதத்தில்தான் 80001 ரூபாயாக சம்பளம் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏழைகளின் வாக்குகளை வாங்கி பாராளுமன்றத்திற்கு சுற்றுலாச் சென்ற நமது எம்.பிக்களின் கோரிக்கை.

நாம் நினைப்பதுபோல் இதுவெறும் ஐம்பதாயிரத்திலோ, எண்பதினாயிரத்திலோ ஒதுங்கிவிடுவது அல்ல. தினசரி அலவன்ஸ், பயண அலவன்ஸ், பென்ஷன், குடும்ப சகிதமாக வரம்பில்லாமல் முதல் தர ஏ.சி ரெயில் பயணம் என லட்சக்கணக்கான பணத்தை அரசு கஜானாவிலிருந்து ஆண்டு தோறும் கறந்து வருகின்றனர் நமது எம்.பிக்கள். தங்குமிடம், பயணம், மெடிக்கல் அலவன்ஸ், குடிநீர்க் கட்டணம் ஆகியவற்றுடன் கான்ஸ்டியூவன்ஸி அலவன்ஸ் என்ற அழைக்கப்படும் தொகுதி அலவன்ஸ், அலுவலகம், தொலைபேசி, இணையதள வசதி,பர்னிச்சர்,மின்சாரம் உள்ளிட்டவைகளில் இருபது லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒவ்வொரு எம்.பிக்கும் வருடந்தோறும் தானமாக வழங்கப்பட்டு வருகிறது.

லோடி எஸ்டேட், துக்ளக் லைன், அக்பர் சாலை, பெரோஸ் ஷா சாலை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள நவீன வசதி வாய்ப்புகளைக் கொண்ட ஹோட்டல்களில் தங்குவதற்காக மாதாந்திர வாடகை இரண்டு லட்சம் ரூபாய், அரசுச் செலவில் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 34 விமானப் பயணம் இவ்வாறு ஏறத்தாழ 37 லட்சம் ரூபாயை ஒரு எம்.பிக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் உழைக்கும் சராசரி குடிமகன் சம்பாதிப்பதைவிட 68 மடங்கு அதிகமான பணத்தை, இந்த நாட்டில் குடிமக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு சென்ற நமது எம்.பிக்கள் சத்தமில்லாமல் பெற்றுவருகின்றனர்.

அமெரிக்காவில் 35 மடங்கும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் 10 மடங்கும்தான் சாதாரணக் குடிமகனின் வருவாயை விட அதிகமான சம்பளத்தை அந்நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள் பெற்று வருகின்றனர். ஆக மொத்தத்தில் துயரத்தில் உழலும் இந்திய குடிமக்களின் வாழ்க்கைக்கும், சுகபோகத்தில் வாழும் எம்.பிக்களின் வாழ்க்கைக்கும் இடைவெளி அதிகரித்து அதிகரித்து நமது ஜனநாயகம் உலக அரங்கில் ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது(?).

வாழ்க இந்திய ஜனநாயகம்!

No comments: