Oct 3, 2010

யாருக்குச் சொந்தம் ரோஜாக்களின் தேசம்? காஷ்மீர் பற்றிய ஒரு சிறப்பு பார்வை.


என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்? - ஈழ கவி: காசி ஆனந்தன்

மீண்டும் பற்றியெரிகிறது காஷ்மீர். இம்முறை தெருக்களில் இறங்கிப் போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்லர். காஷ்மீர மக்கள். சிறார்களும் இளைஞர்களும் யுவதிகளும் முதியோரும் என பால்வேறுபாடின்றி, வயது வேறுபாடின்றி எல்லோரும் வீதிகளில்.... கொப்பளிக்கும் கோபமும், குருதியும் ஒன்றாய்க் கலந்து காஷ்மீரத்தெருக்களில் ஓடுகிறது.

அவர்களின் கோரிக்கை என்ன? அதன் நியாயம் என்ன?

அதற்குமுன் நம் கவனத்திற்காக சிறு தகவல்கள்:

1) நடப்பு 2010-2011 நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட்டில் ராணுவ பட்ஜெட் மட்டும் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 344 கோடி ரூபாய். கடந்த 2006-2007 ஆம் நிதியாண்டின் ராணுவ பட்ஜெட்டைவிட 13 சதவீதம் அதிகம். உலக அளவில் பத்தாவது மிகப்பெரிய ராணுவபட்ஜெட் இந்தியாவினுடையது. (நன்றி தினமலர்)

2) ஆனால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 6 சதம்கூட கல்விக்காக ஒதுக்க முடியாத இந்திய அரசு, உயர்கல்வித்துறையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு பந்திபரிமாறுகின்றது. நிதிநெருக்கடி!!!

3) "இந்தியாவில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் நிதியில்லை என்று சொல்வது ஆதாரமற்ற, வடிகட்டின முழுப் பொய்'' - என்கிறார் நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளியல்மேதை அமார்த்தியா சென்.

4) இன்னொரு அதிர்ச்சி:
நடப்பாண்டின் பட்ஜெட்டில் மொத்த வரவு ரூபாய் 8,27,000 கோடி
மொத்த செலவு ரூபாய் 45,09,000 கோடி. இதில் இந்த ஆண்டு வாங்கி இந்த ஆண்டே திருப்பிக் கட்டவேண்டிய கடன்களின் மொத்தம் 33,80,000 கோடி ரூபாய்.ஆக உண்மையான செலவு ரூபாய் 11,09,000 கோடி மட்டும். ( நன்றி துக்ளக்)

ஏன் வந்தது இவ்வளவு கடன்? ராணுவத்தின் பெரும்பகுதி ஆற்றலும் செலவும் எங்கே செல்கின்றன?

5) 1947-ல் நடந்த முதலாம் இந்தோ-பாக் போர், 1962-ல் நடந்த இந்தோ-சீனப்போர், 1965-ல் நடந்த இரண்டாம் இந்தோ-பாக் போர், 1971-ல் நடந்த பங்களாதேசப்பிரிவினையை வெளிக்காரணம் காட்டி நடந்த மூன்றாம் இந்தோ-பாக் போர், 1999-ல் நடந்த கார்கில் யுத்தம் அனைத்தின் பிண்ணனியில் இருப்பது எது?

கேள்விகள் விதம்விதம்! விடை ஒரே விதம்!! காஷ்மீர்!

ரோஜாக்களின் தேசமாக இருந்த காஷ்மீர் மண் குருதியில் சிவக்கவும், ராணுவத்துக்கு மட்டுமே மிக முக்கியம் கொடுத்து மக்களின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் இந்திய,பாகிஸ்தானிய அரசுகள் தவிக்கவும் காரணமான ஒரே பெயர் காஷ்மீர்!

தேசபக்தி முகமூடிகளைக் கழட்டிவைத்துவிட்டுக் கொஞ்சம் காஷ்மீர்ப் பிரச்சினையின் மூலத்தை ஆராய்வோமா?

1947. ஆகஸ்டு மாதம் சுதந்திரம் அடைந்த நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் என்றுதான் தலையிலடித்துச் சத்தியம் செய்கின்றன நம் வரலாற்று ஏடுகள்.ஆனால் அப்போது சுதந்திரம் பெற்ற ஐநூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள்?

அவைத் தங்கள் விருப்பம்போல இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ளலாம் அல்லது விரும்பினால் தனித்தியங்கலாம்! எலிவளையானாலும் தனிவளைதான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற சிற்றரசுகளில் காஷ்மீரும் ஒன்று. தாங்கள் சுதந்திரமான தேசத்துக்குரியவர்கள் என்ற எண்ணம் காஷ்மீரிகளுக்கு இருந்தது. ஆனால் விழுங்கக்காத்திருக்கும் வல்லூறுகளுக்கு மத்தியில் சின்னப்புறாக்கள் எவ்வளவுநாட்கள் தாக்குப்பிடிக்க முடியும்? பஸ்தூன் பழங்குடியினரைக் கேடயமாக வைத்து காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் புகுந்தபோது தாக்குப்பிடிக்க இயலாத காஷ்மீர் அரசின் மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடுகிறார்; நெருப்புக்குப் பயந்து எண்ணெய்ச்சட்டிக்குள் விழுந்த கதை அவருக்குத் தெரியாதுபோலும்!

"இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிடமுடியாது;காஷ்மீரை எங்களுடன் இணைத்துவிட்டால் இந்தியா உங்களுக்குத்தேவையான எல்லா ராணுவ உதவிகளையும் செய்யும்" என்று வலைவிரித்தார் வல்லபாய் பட்டேல். பூனை கைக்குள் அகப்படுவதைவிட கூண்டுக்குள் இருப்பது மேல் என்ற முடிவுக்கு வந்த ஹரிசிங்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி இந்த ஒப்பந்தம் (Instrument of Accession) கஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி பாதுகாப்பு, வெளியுறவு போன்ற சில துறைகளைத்தவிர்த்து ஏனைய அனைத்தும் காஷ்மீர் அரசின் வசமே இருக்கும். போர் முடிந்தவுடன் ஐ.நா சபையின் மேற்பார்வையில் ஓட்டெடுப்பு நடத்தி காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதா, அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா, அல்லது தனித்தியங்குவதா என்பதை காஷ்மீர மக்களே முடிவு செய்வார்கள் என்று உறுதியளிக்கப்பட்டது.

ஜூன் 16.1952ல் இந்திய பாராளுமன்றத்தில் ஜவஹர்லால் நேரு உரையாற்றுகிறார்:

"முறையான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு ”நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை” என காஷ்மீர் மக்கள் கூறுவார்களானால், எங்களுக்கு அது வருத்தமாக இருப்பினும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே உள்ளோம். நாங்கள் அவர்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்பப்போவதில்லை” காஷ்மீரில் நுழைந்த இந்தியப்படைக்கும் பாகிஸ்தான் படைக்குமான போரில் மூன்றில் இரு பங்கு நிலப்பகுதி இந்தியாவின் வசமும், எஞ்சிய பகுதி பாகிஸ்தானின் கைக்கும் போனது.

காஷ்மீர் இணைப்பிற்கென்று இந்திய அரசியல்சாசனத்தில் இணைக்கப்பட்ட பிரிவு எண் 370 காஷ்மீர் தனக்கென ஒரு அரசியல்சாசனத்தை இயற்றிக்கொள்ள வகைசெய்ததும் இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது.

நன்றி: விந்தை மனிதன்

No comments: