Oct 2, 2010

"பாபர் மசூதி தீர்ப்பு" நீதித்துறை காவிதுரை ஆகிவிட்டது.

பாபர் மசூதிதான் ராமன் பிறந்த இடம்னு சொன்னா என்ன, நம்பிக்கைன்னு சொன்னா என்ன ரிசல்டு ஒண்ணுதானே. பிறந்த இடம்னு சர்மா சொன்னதாவது பரவாயில்லை. அவரு கோசலைக்கு பிரசவம் பார்க்கும்போது கூட இருந்திருப்பாருன்னு ஒத்துக்கலாம். அங்கதான் பொறந்ததா இந்துக்கள் நம்பறாங்கன்னு சொல்லி, அந்த இடத்த பட்டா போட்டு கொடுத்திருக்கிறானே, அதுக்கு என்ன சொல்றது? “இந்து” “நம்பிக்கை” ரெண்டு வார்த்தையுமே ஃபிராடு. இந்த லட்சணத்துல அந்த மசூதியில மினாரா இல்லயாம். மற்றவர்கள் வழிபாட்டுத் தலத்தை இடிச்சு கட்டினா அது இசுலாத்துக்கு விரோதமாம். அதுனால இசுலாமிய முறைப்படி இது மசூதி இல்லையாம்.

“இந்து” வுக்கு அந்த முறையெல்லாம் கிடையாதாம். அம்பிகளுக்கு ஆகம விதி தெரியுமா? 12வருசம் ஒரு கோவிலுக்கு கும்பாபிசேகம் பண்ணலன்னா, அந்தக் கோயில் சிலையில கடவுள் கிடையாது. செத்துப்போயிட்டாருங்குது ஆகம விதி. அப்படின்னா ராமன் செத்துப்போன இடம்னுதான் அதை சொல்லணும். அத வுடு. இந்தியா முழுவதும் 12 வருசமா கும்பாபிசேகம் நடக்காத கோயிலையெல்லாம் இடிச்சு கக்கூசு கட்டிடலாமா? தயாரா? கடவுள் செத்துப்போன கோயில்ல பார்ப்பான் மணியடிச்சு வசூல் பண்றது நியாயமா?

இன்னொருத்தன் வழிபாட்டுத்தலத்தை இடித்து அங்கே மசூதி கட்றது இசுலாமுக்கு விரோதம்னு சட்டம் பேசுறாரு சர்மா. அது யோக்கியமான மதமா இருக்கே. புத்த விகாரையையும், சமணப் பள்ளியையும் இடிச்சு கட்டினதுதானே பல தென்னாட்டு கோயில்கள்? நாகப்பட்டினம் புத்தவிகாரையிலிருந்து புத்தரின் தங்கச் சிலையை திருடி உருக்கித்தான் சீரங்கம் கோயிலுக்கு திருப்பணி செஞ்சேன்னு திருமங்கையாழ்வார் எழுதி வச்சிருக்காரே, அந்த திருட்டு சொத்த என்ன செய்யலாம்? ஹிந்துக்களுக்கு அது தோஷம் இல்லையா?

மசூதின்னா அதுக்கு மினாரா இருக்கணுமாம். ஆனா விநாயகருக்கு அதெல்லாம் தேவையில்ல. பிள்ளையார்னா அத சாக்கடை மேல வக்கலாம். இடம் பிடிக்கணும்னா கக்கூசுக்குள்ளயும் வக்கலாம். குப்பை மேட்டிலயும் வக்கலாம். நாலு பொறுக்கிப் பசங்க மரத்தடில மங்காத்தா ஆடணும்னா அங்க ஒரு கல்லை நட்டு, குங்குமத்த பூசி அதையும் பட்டா போட்டுக்கலாம். ஏன்னா, ஹிந்துக்களை பொருத்தவரை பரம்பொருள் எங்கும் இருக்கிறார்னு சொல்றார் நீதிபதி. வெக்கமாயில்ல. தூ.

சரி. சாணியக்கூட கடவுள்னு ஒத்துக்குற அளவுக்கு இலக்கணம் வகுத்த பரந்த நம்பிக்கை கொண்டது இந்து மதம். விட்டுத்தள்ளு. இந்துவுக்கு என்ன இலக்கணம். இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்லுது அம்பிகளுக்கு தெரியுமா? யார் இசுலாமியன் இல்லையோ, கிறித்தவன் இல்லையோ, பார்சி இல்லையோ அவனெல்லாம் இந்து. இதுதான் விளக்கம்.

இந்த விளக்கத்தையே சிவில் வழக்குக்கு மொழிபெயர்த்தா எப்படி வரும்? எதுடா உன் வீடுன்னு கேட்டா கோவிந்தசாமி வீடு, எது குப்புசாமி வீடு, சிவசாமி வீடு தவிர மிச்சமெல்லாம் என் வீடுதான்னு பதில் வரும். அதான் இப்ப வந்திருக்கிற தீர்ப்பு. மத்தவனெல்லாம் பட்டாவைக் காட்டணும். இவுக மட்டும் நம்பிக்கை, பரம்பொருள்னு அடிச்சு விடுவாங்க.

“வெள்ளைக்காரன் மட்டும் இல்லைன்னா நாமள்ளாம் சைவம், வைஷ்ணவம், சாக்தம், கௌமாரம், காபாலிகம்னு ஒத்தருக்கொத்தர் அடிச்சுண்டு செத்திருப்போம். ஹிந்து மதம்னு ஒண்ணை உற்பத்தி பண்ணி நம்ம எல்லோரையும் ஒண்ணா சேத்தவன் வெள்ளைக்காரன்தான்” அப்டீன்னு காஞ்சி மகா பெரியவா எழுதி வச்சிருக்காள். அம்பிகளுக்குத் தெரியுமோ?

அயோத்தி ஒரு புனித ஸ்தலம்னு எந்த இந்துவும் எந்த காலத்திலயும் தீர்த்தயாத்திரை போனதில்லை. அது இந்தியா முழுவதும் புகழ் பெற்ற புனித ஸ்தலமானது 1980 களில்தான். அதுக்கு முன்னால ராமர் எப்படி இருப்பார்னு கேட்டா என்டி ராமராவ் மாதிரி இருப்பார்னு தான் மக்களிடமிருந்து பதில் வரும். ராமராவைப் பார்த்து மூஞ்சியில ராமர் கலரை பூசிக்கிட்டு, கூட ஒரு அனுமாரையும் கூட்டிகிட்டு, ஆர்மோனியப் பெட்டியோட சென்னை வீதிகளில் இன்னைக்கும் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கிறார்கள் தெலுங்கு தேசத்து ஏழைகள். அப்புறம் அதே வேசத்தை வச்சி ஆந்திராவின் முதலமைச்சர் ஆனார் என்டி ராமாராவ். 1980 களில் தூர்தர்சனில் ராமாயணம் போட்டு பிரபலமாக்கியதற்கு அப்புறமாதான், இந்த ராமனை வச்சி நாடு பூரா பிச்சை எடுக்கலாமே ங்கிற ஐடியா அத்வானிக்கு வந்தது. இதான் ராமஜன்ம்பூமியின் கதை. 1949 இல சிலைய அங்கே திருட்டுத்தனமா வச்சி கலவரத்தை உண்டுபண்ணப் பாத்தும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளால முடியல. அப்புறம் பசுவதைத் தடுப்பு, உள்ளூர் கலவரம், ஏகாத்மத யாத்ரான்னு என்னென்னமோ பண்ணிப்பாத்து முடியாம கடைசியில கிளிக் ஆன ஐடியாதான் ராம ஜன்ம பூமி. மசூதிக்கு உள்ளே திருட்டுத்தனமா வச்ச சிலைக்கு வழிபாடு நடத்த திறந்து விட்டா உ.பியில இந்து ஓட்டை கவர் பண்ணிடலாம்னு நம்பி கதவைத்திறந்தாரு ராஜீவ் காந்தி. ஆனா அவர் நம்பிக்கைய அத்வானி பிக்பாக்கெட் அடிச்சிட்டாரு. இதான் கதை.

ஒரு பக்கம் நம்பிக்கைன்னு பேசுறது. இன்னொரு பக்கம் மசூதிக்கு அடியில கோயில் இடிபாடு இருந்தது, “ஆர்க்கியலாஜிகல் சர்வேயே சொல்லியிருக்காள்”னு அவுத்து விடறது. கோயில் இடிபாடு மட்டுமா இருந்த்து, பாரதிய ஜனதா ஆட்சியில நடத்திய அந்த ஆய்வுல எலும்பெல்லாம் கூடத்தான் கெடச்சது. அப்போ கோயில்ல உக்காந்து கறி தின்னது யாரு? அயோத்தி பல நூற்றாண்டுகள் தொன்மையான நகரம். ஏற்கெனவே அது பவுத்த மையம். இசுலாமியர்கள் ரொம்ப லேட்டா வந்தவங்க. இங்க வந்து மசூதி கட்ட ஆப்கானிஸ்தானில் இருந்தா நிலம் கொண்டு வர முடியும்? இந்தியாவுல வெள்ளைக்காரன் கட்டியிருக்குற கட்டிடங்களை தோண்டிப்பாத்தா எங்கயுமே அடியில கோயில் இருக்காதா? இல்ல இந்துக் கோயிலையெல்லாம் தோண்டிப்பாத்தா அடியில பவுத்த சமண விகாரைகள் இருக்காதா? அவ்வளவு ஏன், நீங்க நங்கநல்லூர், மடிப்பாக்கத்துல கட்டி கணபதி ஹோம்மஃ பண்ணி கிரகப் பிரவேசம் நடத்தின வீடுகளெல்லாம் கை படாத கன்னி நிலத்துல கட்டினதா? “சூத்ராள் சுடுகாடு இருந்த இடம்தான், இருந்தாலும் இந்தக் காலத்துல இதெல்லாம் பார்க்க முடியுமோ, சீப்பா கிடைக்கும்போது விடமுடியுமோ? பரிகாரம் பண்ணிட்டா போச்சு”ன்னு பூமிபூஜை போட்டு கட்டின வீட்ட இப்போ தோண்டிப்பாத்தா அடியில சுடுகாடு இருக்காதா? ஒரு முனீஸ்வரன் கோயில், ஒண்டிக் கருப்பணசாமி கோயில்கூட இருக்கதா? தோண்டிப் பார்க்கலாமா, தயாரா?.

No comments: