Sep 20, 2010

குமரி மாவட்டத்தில் ஹிந்து முன்னணியின் வெறியாட்டம்.

நாகர்கோவில்,செப்.20:வடநாட்டிலிருந்து தமிழக மக்களின் நல்லிணக்கத்தையும், அமைதியான சூழலையும் கெடுப்பதற்காகவே ஏற்றுமதிச் செய்யப்பட்ட விழாதான் விநாயகர் சதுர்த்தி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் விசர்ஜன ஊர்வலம்.ஆண்டுதோறும் மக்களிடையே பதட்டத்தையும், கலவர பீதியையும் உருவாக்கிவருகிறது ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள் நடத்தும் விசர்ஜன ஊர்வலங்கள். இந்த ஊர்வலங்களின் போது தமிழகத்தின் பலபகுதிகளிலும் கலவரத்தை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ள அமைப்புதான் ஹிந்து முன்னணி.

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மஸ்ஜித்கள் வழியாகத்தான் செல்வோம் என அடம்பிடிப்பதும், அவ்வழியாக ஊர்வலம் செல்லும்பொழுது இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவமதிக்கும் வார்த்தைகளை உதிர்த்து கொந்தளிப்பை ஏற்படுத்துவதும் ஆண்டுதோறு நடந்துவரும் வழக்கமாகிவிட்டது.

ஹிந்துத்துவா சக்திகள் வலுவாக காலூன்றியிருக்கும் மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம். இங்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருவிதாங்கோடு என்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊரில் மோதல்களை உருவாக்கியவர் ஹிந்து முன்னணியினராவர். 1980 களில் மண்டைக்காட்டில் நடந்த கலவரத்திற்கு காரணமான இந்த பயங்கரவாதிகள் விசர்ஜன ஊர்வலம் என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் மக்களை பீதிவயப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வாண்டு 17,18,19 தேதிகளில் விசர்ஜன ஊர்வலங்களுக்கு அனுமதியளித்தது காவல்துறை. ஹிந்து முன்னணி சார்பில் நேற்று(19-ஆம் தேதி) விசர்ஜன ஊர்வலங்கள் மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் நடைபெற்றது. பதட்டமிகுந்த பகுதியாக கருதப்படும் திருவிதாங்கோட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இருந்தும்கூட ஊர்வலத்தில் பங்கேற்ற ஹிந்து முன்னணி பயங்கரவாதிகள் முஸ்லிம் கோபத்தைக் கிளறும் வகையில் 'ராமர் கோயில் கட்டுவோம்' போன்ற கோஷங்களை எழுப்பினர். ஆயினும், முஸ்லிம்கள் அமைதி காத்தனர்.

திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அழகிய மண்டபத்தில் நேற்று காலை ஹிந்து முன்னணியினரின் விசர்ஜன ஊர்வல வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தி.மு.க முப்பெரும் விழாவையொட்டி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அச்சாலை வழியாக வந்துக்கொண்டிருப்பதால் வாகனங்கள் புறப்பட உத்தரவிட்டனர் போலீசார். ஆனால், ஹிந்து முன்னணியினர் மறுக்கவே போலீஸ் லத்தி-சார்ஜில் ஈடுபட்டது. இதில் கோபமடைந்த ஹிந்து முன்னணியினர் தி.மு.க கொடிகள் மற்றும் ஃப்ளக்ஸ்கள், தட்டிபோர்டுகள் ஆகியவற்றை சேதப்படுத்தினர்.

கிள்ளியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மிடாலம் கடற்கரையில் விசர்ஜனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. இதில் 200 க்கும் மேற்பட்ட வாகனங்களில் 155 சிலைகள் எடுத்துவரப்பட்டன. இந்த ஊர்வலத்தில் 1000 பெண்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர்.

மங்களக்குன்று, உதயமார்த்தாண்டபுரம் வழியாக மிடாலம் கடற்கரைக்கு ஊர்வலம் சென்றது. வருடந்தோறும் சிலைகளை கரைக்கும் இடத்திற்கு சிலைகளை கொண்டுச் சென்றனர். அப்பொழுது தேவையில்லாமல், கிறிஸ்தவ மீன்பிடித் தொழிலாளிகளின் படகுகளில் தங்களது துணிமணிகளை வைத்துள்ளனர். வன்முறையை உருவாக்கவேண்டுமென்பதே இவர்களது நோக்கமாகும். இதனால் கிறிஸ்தவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கல்வீச்சில் முடிவடைந்தது. இதனால் சிலையை கரைக்காமல் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் சிலைகளை மேல்மிடாலம் சாலையின் நடுவே வைத்தவாறு மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் திடீரென ஹிந்து முன்னணி பயங்கரவாதக் கும்பல் அங்கிருந்த கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் கடைகளை தீவைத்துக் கொளுத்தி சூறையாட ஆரம்பித்தன. இதில் 10 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. 50 கடைகள் சூறையாடப்பட்டது. அரசு ரேசன் கடை,செல்ஃபோன் டவர், அரசு பஸ்,மோட்டார் பைக் ஆகியன தீக்கிரையாக்கப்பட்டது. தீக்கிரையாக்கப்பட்ட கடைகளில் ஓட்டல், மளிகைக்கடை, சிமெண்ட் விற்பனைக்கடை ஆகியன அடங்கும். கடைகள் தீப்பற்றி எரியும்பொழுது அதனை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களை வன்முறையாளர்கள் அனுமதிக்கவில்லை.

ஹிந்து முன்னணியினரின் கோரத்தாண்டவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆயுதப்படை மற்றும் அதிரடிப்படைப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணியினரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுச் செய்யவேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து கலவர பீதியை உருவாக்கிவரும் ஹிந்து முன்னணியை தடைச் செய்யவேண்டும். விநாயகர் விசர்ஜன ஊர்வலங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கவேண்டும் என்பது நடுநிலையாளர்களின் கோரிக்கையாகும். அரசு இதனை கவனத்தில் கொள்ளுமா?

நன்றி: பாலைவனதூது

No comments: