வாஷிங்டன், ஆக.17: எதிர்காலத்தில் வேலை வாய்ப்புக்காக இந்தியா, சீனா, ஜெர்மனி, கொரியா ஆகிய நாடுகளிடையே கடும் போட்டி இருக்கும். ஆனால் அமெரிக்கர்களுக்கு அமெரிக்காவில் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று அதிபர் ஒபாமா கூறினார்.தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஒபாமா மேலும் கூறியது: சர்வதேச சமூகத்தில் அமெரிக்கர்கள் இரண்டாமிடத்துக்குத் தள்ளப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆனால் வேலை வாய்ப்புக்காக இந்தியா, சீனா, ஜெர்மனி, தென் கொரியா ஆகிய நாடுகளிடையே கடும் போட்டி இருக்கும். ஆனால் அமெரிக்கர்களாகிய நாம் முதலிடத்தைப் பெற தளம் அமைப்போம்.
அமெரிக்க பொருளாதாரத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னெப்போதையும் விட வலுவானதாக இதை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தற்போதைய உத்தி மூன்று மடங்கு வலுவானதாக அமையும். இதன் மூலம் அனைத்துமே அமெரிக்காவில் தயாரானதாக இருக்கும். அமெரிக்க தயாரிப்புகள்தான் இனி உலகெங்கும் இருக்கும்.வேலை வாய்ப்பை உருவாக்கும் கொள்கைகளுக்கு மக்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும். இதை தேர்தலில் வாக்களிப்பதன் மூலம்தான் தெரிவிக்க முடியும்.
அமெரிக்காவில் வரிச்சலுகை பெற்றுக் கொண்டு வேலை வாய்ப்பை வேறு நாடுகளுக்கு நிறுவனங்கள் அளிக்கும் நிலை தொடராது. இத்தகைய வரிச் சலுகைகளை அரசு ரத்து செய்ய உள்ளது. மாறாக சிறிய வர்த்தகர்களுக்கு அல்லது தொழிலதிபர்களுக்கு சலுகை அளிப்பதன் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உருவாகும்.அமெரிக்காவில் சூழலை பாதிக்காத எரிசக்திக்கு அரசு முன்னுரிமை அளித்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இனியும் சூரிய மின் பலகைகள், காற்றாலை மின்னுற்பத்தி பாகங்கள் மற்றும் பேட்டரியில் இயங்கும் கார்கள் பிற நாடுகளில் தயாரிக்கப்பட்டு இங்கு புழக்கத்துக்கு வருவதைத் தடுக்க வேண்டும். இவை அனைத்தும் இனி இங்கேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். அமெரிக்க மக்களால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவையாக இவை இருக்க வேண்டும்.
அமெரிக்க அரசு 21-ம் நூற்றாண்டின் கட்டமைப்புக்கு முதலீடு செய்கிறது. இவை சாலை வசதிக்காகவோ அல்லது மேம்பாலம் கட்டவோ அல்ல. வெகு விரைவான இணையதளம் மற்றும் ரயில் போக்குவரத்துக்கான முதலீடுகளைச் செய்ய உள்ளது. இவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்.இந்த உத்திகள் அனைத்தும் குடியரசு கட்சியுடையதோ அல்லது ஜனநாயக கட்சியினுடையதோ அல்ல. இவையெல்லாம் பொதுவான, சூழ்நிலைக்குத் தகுந்தபடி எடுக்கப்படும் நடவடிக்கைகள்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும்போது, நான் உங்களிடம் குறிப்பிட்ட ஒரு வாசகம் நினைவுக்கு வரும். அதாவது நம்மால் முடியும் என்பதே அது. ஆனால் மற்றவர்கள் நம்மால் முடியாது என்கின்றனர். வரிச் சலுகை ரத்தால் வெளிநாடுகளுக்குச் செல்லும் வேலை, இனி உள்நாட்டில் அமெரிக்கர்களுக்குக் கிடைக்கும். ரயில், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் திட்டம் மூலம் மேலும் வேலை வாய்ப்பு பெருகும். அமெரிக்காவைப் பொருத்த மட்டில் நான் நினைப்பது ஒன்றுதான். அது எப்போதும் முன்னேற்றப் பாதையில் செல்லும் நாடு என்பதுதான் அது. கடின உழைப்புக்கான வெகுமதி எப்போதும் கிடைக்கும். நமக்குள்ள பொறுப்புகளை அலட்சியப்படுத்தக்கூடாது என்றார் ஒபாமா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment