Jan 8, 2010

மதம்மாறிய தலித்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!


இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமயங்களுக்கு மதம் மாறிய தலித்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பதிலளிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தலித்களுக்கான இடஒதுக்கீடு விஷயத்தில், ரங்கநாத் மிஸ்ரா கமிசனின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதை விட்டும் மத்திய அரசு பின்வாங்குவதாக கூறி சமர்ப்பித்த பொதுநல வழக்கை விசாரிக்கும் வேளையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி கெ.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி பி.எஸ். சௌஹான் அடங்கிய குழு சமூகநீதி அமைச்சகம், சிறுபான்மை பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு மேற்கண்ட நோட்டீஸை அனுப்பியுள்ளது.

இந்து, புத்த, சீக்கிய மதங்களிலுள்ள பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது போன்று மற்ற மதங்களில் மதம் மாறிய தலித்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் எனக் கோரி ஆல் இந்தியா கிறிஸ்துவ பெடரேசன் இந்தப் பொது நல வழக்கைத் தொடர்ந்துள்ளது. மிஸ்ராவின் தலைமையிலுள்ள மத-மொழி சிறுபான்மையினருக்காக நியமிக்கப்பட்ட தேசிய கமிசனின்(என்.ஸி.ஆர்.எல்.எம்) பரிந்துரைகளை நடைமுறைபடுத்துவது தொடர்பான விளக்கம் கோரி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

தேசிய கமிசன் (என்.ஸி.ஆர்.எல்.எம்) சமர்ப்பித்த அறிக்கை இதுவரை வெளியிடவில்லை எனவும் கமிசனின் பரிந்துரைக்கும் காங்கிரஸின் அறிக்கைக்கும் இடையில் பெருத்த வித்தியாசம் இருக்கிறது என்றும் கூறி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, மதம் மாறிய தலித்களின் உரிமைகளைத் தடுப்பதற்கான முயற்சியாகும் என வழக்கறிஞர்கள் கெ.கெ. வேணுகோபால் மற்றும் டி. வித்தியானந்தம் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

என்.ஸி.ஆர்.எல்.எம் அறிக்கை பழங்குடியினருக்கான தேசிய கமிசனின் பரிசீலனைக்கு மத்திய அரசு அனுப்பியிருந்ததாகவும் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு (முஸ்லிம்களுக்கு 10 மற்றவர்களுக்கு 5 சதவீதம்) என்ற நிலைபாட்டில் அவர்களுக்கு ஒத்தக்கருத்தே உள்ளது எனவும் வேணுகோபால் கூறினார்.

மதம் மாறிய தலித்களின் இடஒடுக்கீடை எல்லா மதங்களுக்கும் சாதகமாக்குவதற்குத் தடையாக இருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு எண் 341-ன் படியுள்ள 1950 ப்ரசிடன்சியல் உத்தரவின் மூன்றாம் பகுதியாகும் எனச் சுட்டிக்காட்டிய புகார் மனு, அந்தப் பிரிவை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

அதேநேரம், புத்த மதத்திற்கு மாறிய தலித்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மீது கேள்வி எழுப்பி சமர்ப்பிக்கப்பட்ட மற்றொரு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புத்த மதத்திற்கு மாறிய தலித்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதிப் படுத்தும் 1990ஆம் ஆண்டு உருவாக்கிய சட்டத்திருத்தத்தை நீக்க வேண்டும் என்று அம்மனு கோரியது.

புத்தமத்திற்கு மாறியவர்களை ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடின் கீழ் கொண்டு வருவது, மதம் மாறும் நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்துவதாகும் என ஆர்.எச். பௌத் என்பவர் மேற்கண்ட மனுவைச் சமர்ப்பித்திருந்தார். புத்தமதத்தில் ஜாதி அடிப்படையிலான வித்தியாசம் இல்லை என்றும் அவர்களுக்கான இடஒதுக்கீட்டைத் தள்ளுபடி செய்யக் கோரிய அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், ஜாதி உரிமையின் மீது ஒரு தனிப்பட்ட மனிதனுக்குக் கேள்வி கேட்க முடியாது என கூறிய உச்சநீதிமன்றம், அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.

No comments: