Oct 28, 2015

இயற்கை விஞ்சானி நம்மாழ்வார்!

கோ. நம்மாழ்வார் (06 ஏப்ரல் 1938 - 30 டிசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு  அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர்அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர்.  

லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம் பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம் குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே.. பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் பேசுவார். ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தனது பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு அழுதார் நம்மாழ்வார்.

நம்மாழ்வாரை அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள். ‘‘டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே’’ என்று ஜே.சி. குமரப்பா சொன்னதை நகைச்சுவை.. இதை தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார். நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவு முறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று முதன் முதலாக நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார். இயற்கை விவசாயம் தொடர்பாகத் தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார். அதற்காகத் தான் பார்த்துவந்த அரசு பணியையும் உதறினார். மேலும், கால்நடையாகக் கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்தார். உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை கூடி, அது அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதைச் சிறிய செயல் விளக்கம் மூலம் நிரூபித்துக்காட்டினார்.  

இன்றைக்கு இயற்கை விவசாயம்பற்றி தமிழகத்தில் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது என்றால், அதற்கு நம்மாழ்வாரின் படிப்படியான செயல்பாடுகளே காரணம்.. 30 டிசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் பிச்சினிக்கோட்டை கிராமத்தில் மீத்தேன் வாயு திட்டத்தை  எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். தமிழர் இயற்கை விஞ்சானி  நம்மாழ்வார்க்கு நினைவு குடில் அமைத்து அவரது சேவையை தமிழர்களுக்கு நினைவு படுத்தும் தமிழர் முன்னேற்று படைக்கு நமது வாழ்த்துகள். 

2 comments:

Yarlpavanan said...

சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

PUTHIYATHENRAL said...

thank you for your visit and comments.