Jun 29, 2011

முதல்வரின் திட்டங்கள் இந்தியாவுக்கு முன்னுதாரணம்!!

சென்னை,ஜூன்.30 - கிராமப்புற மேம்பாடு, வெண்மை புரட்சி, பசுமை புரட்சி, சிறப்பு திட்டம் ஆகிய திட்டங்களை தந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் ஜெயலலிதா இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறார் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் கிராமங்களில் வாழ்வதால் இந்தியாவின் வளர்ச்சி கிராமப்புற வளங்களை மையமாக கொண்டுள்ளது.  இதுவே வளமான இந்தியாவின் 2020 ன் முக்கிய அம்சமாகும். கிராமப்புறங்களில் கல்வி தரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் முதலில் அதற்கு தேவையான அனைத்து விதமான கட்டமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும்.

இதனை புரா திட்டம் மூலம் செய்ய வேண்டும். தமிழக அரசு புரா திட்டத்தை மாநிலம் முழுவதும் நிறைவேற்ற முடிவு செய்திருப்பது இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்த முடிவு கிராமப்புறத்தை மட்டுமல்ல, அனைத்து மற்றும் கல்வி ஆராய்ச்சி துறைகளையும் தொழில் முனைவோர்களையும், விவசாயிகளையும், சுய உதவிக் குழுக்களையும் ஒருங்கிணைத்து ஒரு சமூக பொருளாதார அறிவியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

2020 க்குள் வளர்ந்த இந்தியாவை நாம் படைக்க வேண்டும் என்றால் நம் மாநிலம் ஒவ்வொன்றும் வளர வேண்டும். கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக மாற்ற வேண்டும். சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி, எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியா திகழ வேண்டும்.

அதில் 2 வது விவசாய புரட்சி திட்டம், வெண்மை புரட்சி திட்டம், எத்தனால் பயோ எரிசக்தி உற்பத்திக்கு சிறப்பு கரும்பு வளர்ப்பு திட்டம், சோலார் மற்றும் மரபு சாரா மின்சார உற்பத்தி திட்டங்களை சிறு, குறு மற்றும் பெருந்தொழில் மேம்பாடு, கல்வி, மருத்துவம், நதி நீர், அடிப்படை கட்டமைப்பு, புரா திட்டத்தின் மூலம் நீடித்த கிராமப்புற மேம்பாடு போன்ற அனைத்து துறைகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சிக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை உருவாக்கி இருக்கிறது. இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

No comments: