
வரலாறு நெடுக மனித உழைப்பு மூலக்கனிவளங்களை வெட்டியெடுத்து பலவித கருவிகளை உண்டாக்கிச் சிறுகச் சிறுக உருவாகி வளர்ந்ததன் நீட்சியே இன்று நாம் காணும் விண் முட்டும் கட்டிடங்களும் தேசத்தின் குறுக்கு நெடுக்காக ஓடும் சாலைகளும் அதன் மேல் ஊர்ந்து செல்லும் வாகனங்களும் பறக்கும் விமானங்களும் மிதக்கும் பிரம்மாண்டமான கப்பல்களும். உலகின் எங்கோவொரு மூலையிலிருக்கும் சுரங்கத்தின் ஏதோவொரு குறுகிய பொந்துக்குள் பிராணவாயுவைக் கோரி விம்மும் நுரையீரலுக்கு கந்தகத்தின் நெடியை சுவாசமாய் அளித்துக் கொண்டு இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, புற்றுநோயை சம்பளமாகவும் மரணத்தை போனசாகவும் பெற்றுக் கொண்டு ஏதோவொரு முகம் தெரியாத தொழிலாளி வெட்டியெடுத்து அனுப்பும் நிலக்கரியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் தருகின்ற வெளிச்சமே நமது இரவுகளை ஒளிரவைக்கிறது.
உலகளவில் அரசினால் பதிவு செய்யப்பட்ட கணக்குகளின் படியே சராசரியாக 1,200 தொழிலாளர்கள் சுரங்கங்களில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள். விபத்துகள்’ என்று சொல்லப்பட்டாலும் இவை சாராம்சத்தில் திட்டமிட்ட படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும். தமது லாபவெறிக்காக அத்தியாவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட வேண்டுமென்றே புறக்கணித்து, அதன் காரணமாக ஏற்படுத்தப்படும் சாவுகளை வேறு எந்தப் பெயரிட்டு அழைப்பது? ஆபத்துகளைத் தவிர்க்கச் செய்யப்படும் பாதுகாப்புச் செலவினங்களால் வெட்டியெடுக்கப்படும் கனிமங்களுக்கான லாபம் குறைவதால் அமெரிக்கா போன்ற நாடுகள் மூலப்பொருட்களை தங்களது நாடுகளில் இருந்து எடுக்காமல் இதை அந்நிய நாடுகளில் இருந்து இருக்குமதி செய்கின்றன. என்று தானியுமோ இந்த தொழிலாளர்களை சுரண்டும் நிலை.
No comments:
Post a Comment