Jan 3, 2011
நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுது!!!
ஆந்திராவில் திருட்டுப்பழியை போக்க, பழங்குடி இளைஞர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் கைவிரல்களை விட்டு, குற்றமற்றவன் என்று நிரூபித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா வாரங்கல் மாவட்டம், கொம்முதண்டா என்ற பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோகுலோத் வச்யா (30). இவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் அருகிலுள்ள லட்சுமிபூர் கிராமத்தில், தங்க நகைகளை திருடியதாக, குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, கொம்முதண்டா கிராம பஞ்சாயத்தார் வச்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, திருட்டுப்பழியை போக்க, கொதிக்கும் எண்ணெயில் கைவிரல்களை விட்டு குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என, வச்யாவிற்கு பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். இல்லாவிட்டால், கடும் தண்டனை கிடைக்கும் என எச்சரித்தனர்.
இதனால், வேறுவழி தெரியாத வச்யா, பஞ்சாயத்தார் உத்தரவுப்படி, கொதிக்கும் எண்ணெயில் கைவிரல்களை விட்டார். இதனால், அவரது கைவிரல்கள் எண்ணெயில் வெந்து, கடுமையான காயங்கள் ஏற்பட்டது. இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் நேற்று முன்தினம் அம்பலமானது. இது தொடர்பாக, தன்னார்வ அமைப்பு ஒன்றின் வழியாக, மெகபூபாபாத் நகர போலீஸ் நிலையத்தில் வச்யா புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து, கொம்முதண்டா கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வச்யா மீது முதலில் குற்றம் சாட்டியவர் உட்பட 10 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
"பழங்குடி மக்கள் இதுபோன்ற மூட நம்பிக்கைகள் மீது அதிநம்பிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்படும்' என, தன்னார்வ நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் சீத்தாராம் நாயக் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment