மனித உயிரை காக்கும் மருத்துவ சேவை, பணம் பறிக்கும் தொழிலாக மாறியிருப்பதையும், பணத்திற்காக உடல் உறுப்புகளை திருடி விற்கும் மருத்துவர்கள் பெருகி வருவதையும் நாம் அறிவோம். ஆனால் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களை பார்ப்பது அரிது. அதிலும் மருத்துவத்தோடு நில்லாமல் மக்கள் படும் துன்பங்களுக்காகப் போராடும் மருத்துவர்களை காண்பது அரிதிலும் அரிது. அத்தகையதொரு அற்புதமான மருத்துவர்தான் பினாயக்சென். குழந்தைகள் நல மருத்துவத்தில் உயர்படிப்பு படித்து, மருத்தவத்துறையில் பிரபலமானவர் – கிராமபுறங்களுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் குதிரைக் கொம்பாகிவிட்ட இக்காலத்தில் சத்தீஸ்கரில் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு பல ஆண்டுகளாக மருத்துவச் சேவை செய்து வருபவர் டாக்டர் பினாயக்சென்.
மேற்குவங்கம், ஒரிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் புதைந்து கிடக்கும் ஏராளமதான கனிவளங்களை கொள்ளையடித்துச் செல்ல தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தாராள அனுமதி கொடுத்துள்ளது மன்மோகன் அரசு. அதற்காக அப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களை பலாத்காரமாக அப்புறப்படுத்தி வருகின்றன மத்திய, மாநில அரசுகள். தங்களின் வாழ்விடங்களை பாதுகாத்துக்கொள்ள போராடுவரும் பழங்குடி மக்கள் மீது, போலீசு மற்றும் இராணுவத்தைக் கொண்டும், “சல்வாஜூடும்” போன்ற சட்டவிரோத கொலைகார குழுக்களைக் கொண்டும் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை ஏவிவருகிறது மன்மோகன் அரசு. இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்தான் மருத்துவர் பினாயக்சென்.
நமது இயற்கை வளங்களை அன்னியர்கள் கொள்ளையடித்துச் செல்ல அனுமதித்து வரும் தேசத் துரோக ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் சேவகர்களான மக்கள் விரோத போலீசுக்கும் மக்கள் நலனுக்காக செயல்படும் பினாயக்சென்னின் செயல்பாடு ஆத்திரம் கொள்ள செய்திருக்கிறது. “பினாயக்சென்” மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டார்” என்று பொய் குற்றம் சாட்டி போலியான ஆவணங்களைக் காட்டி பொய் வழக்கு போட்டது சத்தீஸ்கர் போலீசு. காவல்துறையின் போலியான ஆவணங்களை அப்படியே ஏற்றும் பினாயக்சென் தரப்பு உண்மையான ஆதாரங்களை ஏற்க மறுத்தும் மருத்துவர் பினாயக்சென், தோழர் நாராயன் சன்யால், பிஜூஷ்குஹா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, ராய்ப்பூர் மாவட்ட நீதிமன்றம்.
இந்நீதிமன்ற தீர்ப்பை, “தீர்ப்பு வழங்கும் நெறிமுறைக்கே எதிரானது” என விமரிசத்து பினாயக்சென்-ஐ விடுதலை செய்யகோரி உள்ளது, சர்வதேச பொது மன்னிப்பு சபை. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங், “நான் அறிந்தவரை பினாயக் சென் அற்புதமான மனிதர். அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இத்தீர்ப்பிற்கு எதிராக இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். நாமும் மருத்தவர் பினாயக் சென் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment