மும்பை-கொலாபா பகுதியில் இருக்கும் இராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி கார்கில் போர்வீரர்களுக்கும், அப்போரில் மாண்டவர்களின் மனைவிகளுக்கும் தரப்போவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டியை உருவாக்கியது மகாராட்டிர அரசு. இது தொடர்பாக எழுந்துள்ள ஊழல் விவகாரத்தில், நாளுக்கு ஒரு மோசடி குறித்த விவரம் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.
மகாராட்டிர முதல்வர் அசோக் சவான் தனது மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கியிருப்பது அம்பலமாகவே, சவானைப் பதவி விலக வைத்து அதைக் காட்டியே உத்தம வேடம் போட முனைந்தது, காங்கிரசு. ஆனால் உள்ளே செல்லச்செல்ல, காங்கிரசு, பாரதிய ஜனதா, சிவசேனா, அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள் என்று மிகப் பிரம்மாண்டமானதொரு ஊழல் வலைப்பின்னல் அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது.முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு (சிவசேனா), முன்னாள் முதல்வர் சுசில் குமார் ஷின்டே (தற்போது மத்திய அமைச்சர்),பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நாக்பூரைச் சேர்ந்த பெரும் தொழிலதிபருமான அஜய் சஞ்சேதியின் மகன், பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி போன்ற சர்வகட்சிப் பிரமுகர்களும்,விதிமுறைகளை மீறி இந்தக் குடியிருப்புக்கு அனுமதி அளித்த, 2004-இல் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதிப் வியாஸின் மனைவி நீனா வியாஸ், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் துணைச் செயலர் பி.வி. தேஷ்முக் என ஒரு பெரிய அதிகார வர்க்கக் கும்பலும் ஆதர்ஷில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கின்றது.
ஓட்டுப்பொறுக்கிகளின் மோசடியைக் காட்டிலும், செத்துப்போன சிப்பாய்களின் உடலைக் காட்டி இராணுவ உயர் அதிகாரிகள் இதில் நடத்தியிருக்கும் கொள்ளைதான் மிகவும் கீழ்த்தரமானது. தரைப்படை முன்னாள் தலைமை தளபதிகள் என்.சி.விஜ், தீபக் கபூர், முன்னாள் கடற்படை தளபதி மாதவேந்திர சிங், வைஸ் அட்மிரல் மதன்ஜித் சிங், மேஜர் ஜெனரல் ஆர்.கே.ஹூடா ஆகிய அதி உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இக்குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆதர்ஷ் மோசடிகள் பற்றி அறிவதற்காக பூனாவைச் சேர்ந்த விஹார் துர்வே என்பவர், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்திட்டத்தில் பயனடைந்தவர்கள் பற்றிக் கேட்டிருந்தார். அவருக்கு இரண்டுமுறை தகவல் மறுக்கப்பட்டது. காரணம், மராட்டிய அரசின் தகவல் கமிஷனர் ரமானந்த் திவாரியின் மகனுக்கும் ஆதர்சில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது பின்னர் தெரியவந்தது.
தற்போது முதலமைச்சர் மாற்றம், சி.பி.ஐ விசாரணை என்ற நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கொலாபாவில் உள்ள இராணுவ எஸ்டேட் அலுவலகத்தின் கோப்புகளில் முக்கியமான ஆவணங்கள் பல காணாமல் போயிருக்கின்றன. இராணுவத்துக்குச் சொந்தமான அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடு கட்டுவதற்கு மார்ச் 2000-இல் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழைக் காணவில்லை. முதன்முதலில் எந்தெந்த சிப்பாய்களுக்கு வீடு ஒதுக்குவதாகச் சொல்லி இந்தத் திட்ட முன்வரைவு முன்வைக்கப்பட்டதோ, அதனையும் காணவில்லை. மகாராட்டிர அரசின் நகர்ப்புற வளர்ச்சிச் துறையில் ஆதர்ஷ் சொசைட்டி தொடர்பான கோப்புகளிலும் முக்கியமான காகிதங்களைக் காணவில்லை என்று சி.பி.ஐ. கூறியிருக்கிறது.
ஆதர்ஷ் ஊழலைத் தொடர்ந்து, இதைவிடப் பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் ஊழலான லவாசா ஊழல் அம்பலமாகியிருக்கிறது. விவசாய நிலங்கள், பழங்குடி மக்களின் நிலங்கள் அடங்கிய சுமார் 12,316 ஏக்கர் மலைப்பிராந்தியத்தை மகாராட்டிர அரசு 2001-இல் தாரை வார்த்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. “சிறு கடை வியாபாரிகளையும், குடிசை வாசிகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களுடைய கடைகளையும் வீடுகளையும் இடித்துத் தள்ளும் அரசு, ஆதர்ஷ் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்புகிறார், மேதா பட்கர். தனக்குச் சொந்தமான நிலத்தையே காப்பாற்றிக் கொள்ளமுடியாத இராணுவம், தேசத்தை எப்படிக் காப்பாற்றும் என்று எள்ளி நகையாடுகிறார். மும்பை சாந்தாகுரூஸ் விமான நிலையத்திற்கு அருகிலேயே இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு விலை பேசப்பட்டு கட்டிடங்களாக மாறியிருப்பதையும் அம்பலமாக்கியிருக்கிறார்.
நாடு முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமாக இருக்கும் பல இலட்சம் ஹெக்டேர் நிலங்களில் விலை பேசப்பட்டவை எத்தனை, எத்தனை ஆயிரம் கோடிகளை இராணுவ அதிகாரிகள் விழுங்கியுள்ளார்கள் என்ற விவரங்கள் ஒருக்காலும் வெளியே வரப்போவதில்லை. ஆதர்ஷ் ஊழல் அம்பலமானவுடன் தலைமைத் தளபதிகள் கபூர், விஜ் ஆகியோர் “இந்த வீடுகள் சிப்பாய்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று எங்களுக்குத் தெரியாது” என்று பச்சையாகப் புளுகியிருக்கின்றனர். வீடுகளைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அறிவித்திருக்கின்றனர்.
நேர்மை, கட்டுப்பாடு, தியாகம், ஒழுக்கம் என்றெல்லாம் கதை சொல்லித்தான், சிவில் சமூகத்துக்கு மேம்பட்ட கேட்பாரற்ற அதிகாரமாக இராணுவம் பாதுகாக்கப்படுகிறது. பச்சைப் படுகொலைகள் பல அம்பலமாகி, காஷ்மீரே பற்றி எரியும் சூழ்நிலையிலும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் இரத்து செய்யக்கூடாது என்றும், தாங்கள் செய்யும் சட்டவிரோதப் படுகொலைகளுக்காக எல்லோரையும்போல நீதிமன்றத்தில் நின்று இராணுவம் பதில் சொல்ல முடியாது என்றும் திமிர்த்தனமாகப் பேசி வருகிறது இராணுவத்தின் அதிகார வர்க்கம்.
ஆனால், கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதப்பசுவாகச் சித்தரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் இராணுவத்தின் யோக்கியதை ஆதர்ஷ் ஊழலில் சந்தி சிரிக்கிறது. போர் முனையில் உயிர் விட்ட தனது சிப்பாய்களுடைய பிணத்தைக் காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டியிருக்கும் இராணுவ உயர் அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கிகளைக் காட்டிலும் தாங்கள் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
பொதுச்சொத்தை கொள்ளையிடுவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டிருக்கும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் இராணுவத்தின் உடுப்பையும் களைந்து நிர்வாணமாக்கி இருகின்றன. ஆயுதம் முதல் சிப்பாய்களுக்கான அன்றாட ரேசன் வரையில் இராணுவத்துக்காக செய்யப்படும் அனைத்துச் செலவுகளிலும், 10% கமிஷன் என்பது இந்திய இராணுவத்தில் அமல்படுத்தப்படும் எழுதப்படாத விதி. ஆதர்ஷ் ஊழலில் இந்த சதவீதக் கணக்கு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. 103-க்கு 100 ஊழல். அதாவது, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர்முனையில் இருந்தவர்கள்.ஆதர்ஷ் என்ற இந்திச் சொல்லுக்கு முன்மாதிரி என்று பொருள். தேசத்துக்கே இராணுவம்தான் முன்மாதிரி எனும்போது, இராணுவம் சம்பந்தப்பட்ட ஊழலும் முன்மாதிரியாகத்தானே இருக்கவேண்டும்?
நன்றி; வினவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment