Dec 25, 2010

இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெடித்துச் சிதறியது.

ஸ்ரீஹரிகோட்டா, டிச. 25: ஜி.எஸ்.எல்.வி. எஃப்-6 ராக்கெட்டின் பயணம் தோல்வி அடைந்தது.ரூ.125 கோடியில் வடிவமைக்கப்பட்ட ஜிசாட்-5பி என்ற நவீன தொலைத்தொடர்பு செயற்கைக் கோள், சி-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்களுடன் 2,310 கிலோ எடையுள்ள இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ ஏற்பாடு செய்தது.இதன் மூலம் அதிக எடையுள்ள செயற்கைக் கோள்களை ஏவுகலனில் எடுத்துச் சென்று, துருவ வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் திறன் பெற்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்டவுன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சரியாக 29 மணி நேரத்துக்குப் பின், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த ராக்கெட் ஆரஞ்சு நிற புகையை கக்கியவாறு, ஏவுநிலைகளில் இருந்து விடுவித்துக் கொண்டு புறப்பட்டது.

ஆனால், விண்ணில் சீறிப் பாய்ந்த சில நிமிடங்களிலேயே ராக்கெட்டின் நிலை அடுக்குகளில் (ஸ்டேஜ்) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தனது பாதையில் இருந்து விலகிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட், அடுத்த சில விநாடிகளில் தீக்கோளமாக வெடித்துச் சிதறியது. இதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். முன்னதாக, முதன் முறையாக முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ஏவப்பட்டு, தோல்வி அடைந்தது. 2-வது முறையாக இப்போதும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றி பெறாதது சற்று பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளின் வரிசையில் இது 3-வது தோல்வி ஆகும்.

முன்னதாக இந்த ஜி.எஸ்.எல்.வி. எஃப்-6 ராக்கெட்டை கடந்த 20-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ராக்கெட்டின் கிரையோஜெனிக் நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் இதன் ராக்கெட் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறுகள் சீரமைக்கப்பட்ட பின்னரும், இப்போது ராக்கெட்டின் பயணம் தோல்வி அடைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிக உந்து திறனுள்ள கிரையோஜெனிக் இயந்திரம் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை செயற்கைக் கோள்களைச் செலுத்த இஸ்ரோ பயன்படுத்தி வருகிறது.

No comments: