Dec 18, 2010

ராஜா அப்ரூவராக மாறிஉண்மைகளை தெரிவிக்க வேண்டும்

சென்னை : முதல்வர் கருணாநிதி கூறியது போல, ஸ்பெக்ட்ரம்' பிரச்னையில், ராஜா ஒருவரால் இவ்வளவு பெரிய தொகையை ஊழல் செய்திருக்க முடியாது. அவர் அப்ரூவராக மாறி, உண்மைகளை வெளியே சொல்ல வேண்டும், என, முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி கூறியுள்ளார்.சென்னையில், பல்கிவாலா அமைப்பு மற்றும் சென்னை தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில், "ஊழலின் உண்மையான தாக்கம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு, முன்னாள் மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் பேசியதாவது:இந்தியாவில், 120 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதில், அதிகளவு பேர் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளனர். இவர்களை அரசியல்வாதிகள் ஓட்டு வங்கிக்கு மட்டும் தான் பயன்படுத்துகின்றனர். ஊழலை ஒழிப்பதற்கு அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும்.அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்க வேண்டும். ஊழல் வழக்கில் யாராவது சிக்கினால், அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதற்கு பதில், டிஸ்மிஸ் செய்ய வேண்டும். நம் அரசு அலுவலகங்களில், ஊழல் போர்வை தான் படர்ந்துள்ளது. ஊழலை ஒழிப்பதற்கு, அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.இவ்வாறு விட்டல் பேசினார். அவரைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய, மூத்த பத்திரிகையாளர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ÷ஷாரி பேசியதாவது:நாட்டில் ஊழல் என்பது புற்றுநோய்க்கு சமமானது. அதை, முளையிலேயே அழித்துவிட வேண்டும். ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் எங்கள் மீது பழி போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், நாங்கள் பின்பற்றிய, முதலில் வந்தவர்க்கு முன்னுரிமை கொள்கையை, ராஜாவும் அவருக்கு முந்தைய தொலைத்தொடர்பு அமைச்சரும் பின்பற்றாமல், அவர்களுக்கு ஏற்ப விதிமுறைகளை மாற்றி கொண்டனர்.

நான் அமைச்சராக இருக்கும் போது அதில் சில மாற்றங்களை கொண்டு வந்தேன். அதை கூட அவர்கள் கடைபிடிக்கவில்லை. சி.பி.ஐ., விசாரணைக்கு நான் தயாராக உள்ளேன். பத்திரிகைகள், அரசியல்வாதிகளின் பேச்சை, அப்படியே எழுதாமல், அதில் உள்ள உண்மையை மட்டும் எழுத வேண்டும். நம் நாட்டில் ஒரு ஊழலை பற்றி விசாரிக்கும் போதே, அதை விட பெரிய ஊழல் பேச்சு ஏற்பட்டால், பழையதை மக்கள் மறந்து விடும் நிலை உள்ளது. நிரா ராடியா டேப் விவகாரம் வரும் வரை, பிரதமரை குற்றம் சாட்டினர். ஆனால், தற்போது அனைவரது கவனமும் ராடியா மேல் தான் உள்ளது.அமைச்சரவையில் நடக்கும் எல்லா விஷயங்களும், பிரதமருக்கு நிச்சயம் தெரியும். அவருக்கு தெரியாமல் நடப்பதற்கு வாய்ப்பில்லை.

No comments: