கொழும்பு : போர் குற்றம் தொடர்பாக ஆய்வு நடத்த வரும் ஐ.நா. குழுவை அனுமதிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று இலங்கை அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.
முன்னதாக இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த நிபுணர்கள் குழுவை அனுப்புவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறியதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தங்கள் நாட்டு உள்விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்றும் காட்டமாகக் கூறியிருந்தது. இந்நிலையில் இலங்கையின் நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை வெளியுறுவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பந்துலா ஜெயசேகர கூறியது: இலங்கையில் நடைபெற்ற போரில் போர் குற்றங்கள் நடைபெற்றதாகக் கூறி அதனை ஆய்வு செய்ய குழுவை அனுப்புவோம் என்று ஐ.நா. அறிவித்திருந்தது.
இது தொடர்பாக இலங்கை அரசுக்கு கோரிக்கை வந்தால் அதனை பரிசீலிப்போம் என்று கூறிள்யுள்ளார். முன்னதாக இலங்கையில் நடைபெற்ற போர், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து ஆராய இலங்கை அரசே ஒரு குழுவை அமைத்தது. இதன் மூலம் உண்மையை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற போரின் போது சரணடைந்த விடுதலைப் புலிகளும், அப்பாவித் தமிழர்களும் எவ்வாறு சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பான வீடியோ சமீபத்தில் பிரிட்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
தமிழர்கள் படுகொலையை ராஜபட்சதான் முன்னின்று நடத்தினார் என்பதை விக்கி லீக்ஸ் இணையதளமும் அம்பலப்படுத்தியது. இதனால் இலங்கையில் நடைபெற்ற கொடூரங்களை அனைவரும் அறிந்து கொள்ள நேரிட்டது. பிரிட்டன் சென்ற ராஜபட்சக்கு அங்குள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அங்கு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளலாமல் ராஜபட்ச நாடு திரும்பினார். இதன் காரணமாக இலங்கை மீது சர்வதேச நெருக்குதல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் ஐ.நா. ஆய்வுக்குழுவை அனுமதிப்பதாக ராஜபட்ச அரசு அறிவித்துள்ளது. சர்வதேச குழு விசாரணை: இதனிடையே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் மனித உரிமைகளை மீறி நடந்து கொண்டது குறித்து ஐ.நா. தலைமையில் சர்வதேச குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment