லண்டன் : பிரிட்டன் ஐகோர்ட் தீர்ப்பின் மூலம் ஜாமீனில் வெளியே வந்துள்ள "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், "உண்மைகளை வெளிக்கொண்டு வர தொடர்ந்து போராடுவேன். சுவீடனுக்கு என்னைக் கொண்டு போகும் முயற்சி, என் மீதான அவதூறு பிரசாரத்தின் ஒரு பகுதி' என்று தெரிவித்துள்ளார். அவரது ஜாமீனுக்கான பிணையத் தொகை "ட்விட்டர்' இணையதளம் மூலம் திரட்டப்பட்டு வருகிறது.
பாலியல் குற்றச்சாட்டில் கடந்த 7ம் தேதி கைதான அசாஞ்ச், ஜாமீன் கோரி இரண்டு முறை மனு தாக்கல் செய்தார். முதன் முறை அவருக்கு மறுக்கப்பட்ட ஜாமீனை, வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் இரண்டாவது முறை சில நிபந்தனைகளுடன் தர முன்வந்தது. ஆனால், சுவீடன் தரப்பு வக்கீல்கள் அந்த ஜாமீனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ததால், அசாஞ்ச் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில், அசாஞ்சின் ஜாமீனை எதிர்த்து தாங்கள் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என, சுவீடன் வக்கீல்கள் தெரிவித்ததால் மேலும் குழப்பம் நீடித்தது. பிரிட்டன் அரசு தரப்பு வக்கீல்கள் தான், ஜாமீனை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் என்பது பின்பு தெரிந்தது. நேற்று ஐகோர்ட்டில், அரசு தரப்பு வாதம் நிராகரிக்கப்பட்டு, வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் விதித்த நிபந்தனைகளுடன், நேற்று முன்தினம் அசாஞ்சுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.
ஜாமீனில் வெளியே வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"என் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவை போலி என்பதை நிரூபிப்பேன். தொடர்ந்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வருவேன்' என்று தெரிவித்தார். இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: எனக்கு எதிரான இவ்வழக்கில், தனிப்பட்ட, உள்நாடு மற்றும் சர்வதேச உள்நோக்கங்கள் உள்ளன. ஆனால், இதன் மூலம் ஐரோப்பாவை சங்கடப்படுத்தும் சில உண்மைகள் வெளிவந்துள்ளன. உதாரணமாக, தனிநபர் ஒருவரை, ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து இன்னொரு ஐரோப்பிய நாட்டுக்கு, அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இன்றி நாடு கடத்த முடியும் என்பது இப்போது தெரிந்துள்ளது.இவ்வாறு அசாஞ்ச் தெரிவித்தார்.
இதற்கிடையில் அசாஞ்சை ஜாமீனில் எடுப்பதற்காக, கோர்ட்டில் செலுத்த வேண்டிய ஒன்றரை கோடி ரூபாய், "ட்விட்டர்' இணையதளம் மூலம் திரட்டப்பட்டு வருகிறது.பிரிட்டன் பத்திரிகையாளர் ஜான் பில்ஜர், பிரிட்டனில் இயங்கி வரும் புலனாய்வுப் பத்திரிகையியல் மையத்தின் இயக்குனர் காவின் மெக் பேடென் மற்றும் சூசன் பென் ஆகிய மூவரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, இந்நிதி வசூலை கண்காணிக்கும்.
இதற்கிடையில், "விக்கிலீக்ஸ்' நிறுவனமும், அசாஞ்சும் ஆஸ்திரேலிய சட்டத்தை மீறவில்லை என, அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். "விக்கிலீக்ஸ்' செயல் குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஜூலியா கில்லார்டு, "பொறுப்பற்ற செயல்' என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment