Dec 15, 2010

வளவாழ்வும்.... வலிமையும்

"A sound mind in a sound body is a short but full description of a happy state in the world." - John Locke (1632-1704)

"Bodily exercise, when compulsory, does no harm to the body. But knowledge which is acquired under compulsion obtains no hold on the mind."
- Plato (427 BC-347 BC) in 'The Republic'

மனித வாழ்க்கையில், மாணவப் பருவம் ஒரு மகத்தான பருவம் என்பதை இன, மொழி, மத வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்வர். இப்பருவத்தில் நாம் பெறும் ஒழுக்கம் அல்லது ஒழுக்கமற்ற பயிற்சிதான் நம் வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கும். இதில், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

மேற்காணும் முதல் பழமொழியில் ஜான் லோக்கி கூறுவதுபோல், உறுதியான உடலில் இருக்கும் உறுதியான மன நிலையே இவ்வுலக வாழ்வின் இனிமை நிலைக்குக் கட்டியம் கூறுவதாகும். இதையும் விஞ்சி, இரண்டாவது முதுமொழியில், 'The Republic' எனும் புகழ் பெற்ற இலக்கியப் படைப்பின் ஆசான் ப்லேட்டோ குறிப்பாகக் கூறுவது, இளமையில் செய்யவேண்டிய உடற்பயிற்சியின் இன்றியமையாமை பற்றியதாகும். இவர் அழகாகச் சொல்கிறார்: "கட்டாயமாகக் கொடுக்கப்பட்ட உடற்பயிற்சியானது, உடலுக்கு எந்தத் தீங்கும் செய்துவிடாது. ஆனால், கட்டாயத்தால் பெற்ற கல்வியறிவானது, மனத்துள் நிலைத்திருக்காது."

இன்று பெரும்பாலான கல்விக்கூடங்களில் பயிலும் மாணவ மாணவியர்க்குப் பாட நூல்களென்றும், வழிகாட்டி நூல்களென்றும், வீட்டுப் பாடங்களென்றும், 'ட்யூஷன்' பாடமென்றும், இன்னும் இவை போன்ற சுமைகள் பலவற்றைச் சுமத்தி, அவர்களைக் கல்வியாளர்களும் கல்விக் கூடங்களை நிர்வகிப்பவர்களும் வெறும் 'சுமை தூக்கிகளாக' ஆக்கிவிடுகின்றார்கள் என்று கூறினால் மிகைக் கூற்றாகாது. இந்நிலையில் சிறிதேனும் மாற்றத்தைச் செய்து, அவர்களுக்குத் தரமான உடற்பயிற்சிகளை வழங்கினால், அறிஞர் ப்லேட்டோ கூறுவது போன்று, உடலுக்குத் தீங்கு விளைக்காத சில உடற்பயிற்சிகளைக் கொடுத்து, ஜான் லோக்கி கூறுவது போன்று, 'A sound mind in a sound body' உடன் எதிர்காலத்தின் இளைய சமுதாயத்தினரைப் பரிணமிக்கச் செய்யலாம்.

அபூபிலால்

No comments: