மதுரை : லிபியா நாட்டில் விற்கப்பட்ட 81 தமிழர்கள் இந்திய தூதரகம் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள், மதுரை போலீஸ் எஸ்.பி., மனோகரிடம் தஞ்சமடைந்தனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூரை சேர்ந்தவர் சக்திவேல் (60). இவர், "வள்ளியம்ஸ் டிராவல்ஸ்' என்ற பெயரில் வெளிநாட்களுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நடத்தினார். தென் மாவட்டங்களை சேர்ந்த பலர் வெளிநாடு செல்ல இவரை அணுகினர். இவர்களில், எட்டாம் வகுப்பு படித்தவர் முதல் பட்டதாரிகள் வரை 81 பேர் லிபியாவில் (வட ஆப்ரிக்கா) வேலை பார்க்க தலா ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சக்திவேலிடம் கொடுத்தனர்.மும்பையில், பெஞ்சமின் என்பவர் நடத்தி வந்த "ஜெடி பிசினஸ் லிங்க்' மூலம் 81 பேரும் டிச., 2009 ல் லிபியாவிற்கு அனுப்பப்பட்டனர். அங்கு, "எல்ரேட்' நிறுவனத்தின் கட்டுமான பணியில் 81 பேரும் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் தலா 1,000 அமெரிக்க டாலர் கொடுத்து சக்திவேல், பெஞ்சமினிடம் இருந்து 81 பேரையும் விலைக்கு வாங்கியதாக அப்துல்லா தெரிவித்துள்ளார். எனவே,அவர் தொழிலாளர்களை கொத்தடிமைகள் போல் நடத்தியுள்ளார். தொழிலாளர்களுக்கு தினமும் இரண்டு வேலை "பிரட்' மட்டுமே உணவாக தந்ததோடு, ஒப்பந்தப்படி மாதம் 450 அமெரிக்க டாலர் சம்பளம் தரவில்லை.அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை பெற்றோரிடம் தெரிவித்தனர்.
தங்களது மகன்களை மீட்டுத்தரும்படி, அந்தந்த கலெக்டர்களிடம், பெற்றோர்கள் புகார் அளித்தனர். தமிழக அரசு முயற்சியை அடுத்து லிபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சுரேஷ், மணிமேகலை ஆகியோர் முயற்சியில், 81 பேரும் மீட்கப்பட்டு, தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களது புகார்படி, சக்திவேலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.இவர்களில் இலந்தைகுளம் முருகன், கமுதி பாண்டி, மீசல் முனியராஜ், கீழத்தூவல் அர்ச்சுனன், அவனியாபுரம் ராமர் உட்பட 51 பேர் தாங்கள் செலுத்திய தொகையை சக்திவேலிடம் இருந்து பெற்றுத் தருமாறு, மதுரை போலீஸ் எஸ்.பி., மனோகரிடம், கோரினர். எஸ்.பி., உத்தரவுப்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment