Nov 7, 2010

அமெரிக்கா ஒக்லாந்து நகரில் கலவரம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது.


வாஷிங்டன்,நவ.7:நிராயுதபாணியான கறுப்பு நிறத்தவர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் முன்னாள் அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஜனவரி ஒன்றாம் தேதி கலிஃபோர்னியாவில் ரயிலில் வைத்து ரகளைச் செய்ததாக குற்றஞ்சாட்டி கைதுச் செய்யப்பட்ட ஆஸ்கர் க்ராண்ட் என்ற ஆப்ரிக்க-அமெரிக்கரை ஜொஹனஸ் மஹ்ஸர்லே என்ற வெள்ளை நிற போலீஸ்காரர் கவிழ்த்துக் கிடத்தி அநியாயமாக சுட்டுக்கொன்றார்.

இவ்வழக்கின் விசாரணை அமெரிக்காவில் பல முறை இனரீதியான மோதலுக்கு வழிவகுத்தது. கைதுச் செய்வதற்கான முயற்சியில் தவறுதலாக துப்பாக்கியால் சுட நேர்ந்தது என வெள்ளை நிற போலீஸ் அதிகாரி வாதிட்டார். ஷாக் ஏற்படுத்தும் உபகரணத்தை எடுப்பதற்கு பதிலாக தவறுதலாக கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் மொபைல் வீடியோ காட்சிகள் வெளிவந்ததைத் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது. நீதிமன்றம் வெள்ளை நிற போலீஸ் அதிகாரிக்கு அளித்துள்ள குறைவான தண்டனையை கண்டித்து கலிஃபோர்னியாவில் ஆக்லந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயுள்தண்டனை விதிக்கப்பட வேண்டிய குற்றத்திற்கு குறைந்தபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். போராட்டக்காரர்கள் கார்கள் மற்றும் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்ததைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸ் கைதுச் செய்தது.

'கடவுளே! குற்றவாளிக்கு ஒரு தண்டனையும் அளிக்கப்படவில்லை!' என கொல்லப்பட்ட க்ராண்டின் தாயார் கதறி அழுதார். இனவெறி மிகுந்த நீதிக் கட்டமைப்புதான் அமெரிக்காவுடையது, என க்ராண்டின் மாமனார் குற்றஞ்சாட்டினார்.

1991 ஆம் ஆண்டில் ஆஞ்சலஸ் என்ற போலீஸ் அதிகாரி ரோட்னி கிங் என்ற கறுப்பு நிறத்தவர் ஒருவரை சித்திரவதைச் செய்யும் வீடியோ காட்சி வெளியானதைத் தொடர்ந்து கடுமையான வன்முறையை கிளப்பிவிட்டது. கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 2,383 பேர்களுக்கு காயம் ஏற்பட்டது. 7000க்கும் மேற்பட்ட தீவைப்பு சம்பவங்களும், 3100க்கும் மேற்பட்ட வியாபார ஸ்தாபனங்கள் தாக்குதலுக்குள்ளான நிகழ்வில் 100 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: