Oct 23, 2010

சுதந்திர கஷ்மீர்:கருத்தரங்கை சீர்குலைக்க காவி பண்டிட்டுகள் முயற்சி.

புதுடெல்லி,அக்.22:கஷ்மீருக்கு சுதந்திரம் தொடர்பாக டெல்லியில் நடந்த கருத்தரங்கை சீர்குலைக்க பண்டிட்டுகள் முயற்சி மேற்கொண்டனர். கருத்தரங்கில் கலந்துக் கொள்ளும் போர்வையில் வந்த பா.ஜ.க ஆதரவு பண்டிட்டுகள் சிலர் போலீசார் முன்னிலையில் வைத்து கருத்தரங்கை அலங்கோலப்படுத்த முயன்றனர். நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இவர்களை வெளியேற்றிய பொழுதும் வெளியே செல்லும் வழியில் ரகளையில் ஈடுபட்டனர்.
தெஹ்ரீக்-இ-ஹூர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி, பிரபல பத்திரிகையாளர் அருந்ததிராய் ஆகியோர் உரைநிகழ்த்தும் பொழுதுதான் இவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

கமிட்டி ஃபார் ரிலீஸ் ஆஃப் பொலிட்டிக்கல் ப்ரிஸனர்ஸ் என்ற அமைப்பு சார்பாக ‘கஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நேற்று டெல்லியில் வைத்து கருத்தரங்கம் ஒன்று நடைப்பெற்றது. மேற்குவங்காள மாநில எ.பி.டி.ஆரின் சுஜாதோ பத்ரா தனது உரையின்போது கஷ்மீருக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் எனக் கோரியபொழுதுதான் பாசிச பண்டிட்டுகள் ரகளையில் ஈடுபட்டு கருத்தரங்கை சீர்குலைக்க முயன்றனர்.

பத்துக்கும் குறைவான பண்டிட்டுகள்தான் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் மறுபுறமிருந்து கஷ்மீரிகள் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என கோஷம் எழுப்பினர். பாசிச பண்டிட்டுகளில் சிலர் ஹுர்ரியத் தலைவர் கிலானியின் இருக்கையை நோக்கிய பாய்ந்த பொழுது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தடுத்துவிட்டனர். நெடுநேரம் நீண்ட ரகளைக்குப் பிறகு பாசிச பண்டிட்டுகளில் சிலரை அரங்கிலிருந்து வெளியேற்றினர் அமைப்பாளர்கள்.

பத்ரா மீண்டும் தனது உரையைத் துவங்கிய பொழுதும் ரகளையால் அவரது பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டது. புரட்சிக்கவிஞர் வரவரராவ், மணிப்பூர் மாநில மனித உரிமை ஆர்வலர் மாலெம், கஷ்மீர் பல்கலைக்கழக ஷேக் ஷவ்கத் ஹுசைன் ஆகியோர் உரை நிகழ்த்தும் பொழுதும் ரகளை ஏற்பட்டது.நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும், பண்டிட்டுகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உங்களுக்கு பேச வாய்ப்பு தரலாம் என நிகழ்ச்சி மட்டுறுத்துனர் எஸ்.எ.ஆர்.கிலானி கூறிய பொழுதில் அதை ஒன்றும் கவனத்தில் கொள்ளாமல் பண்டிட்டுகள் ரகளைச் செய்வதிலேயே குறியாக இருந்தனர்.

அருந்ததிராய் பேச எழுந்த பொழுது பண்டிட்டுகள் கஷ்மீரை துறந்து சென்றது அருந்ததிக்கு தெரியாது என ஒருவர் சப்தமிட்ட பொழுது அருந்ததிராய், தனக்கு பண்டிட்டுகள் கஷ்மீரிலிருந்து வெளியேறியது மட்டுமல்ல, அதற்கு தூண்டுகோலாக இருந்ததுக் குறித்தும் தெரியும் என குறிப்பிட்டார். பண்டிட்டுகளின் உரிமைகளைக் குறித்தும்தான் தான் பேசப்போவதாக அருந்ததிராய் கூறிய பொழுதிலும் ரகளை அடங்கவில்லை.

அலிஷா கிலானி பேச எழுந்த பொழுது பேச அனுமதிக்கமாட்டோம் என பண்டிட்டுகள் கோஷமிட்டனர். பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு ரகளை அடங்கியது. தொடர்ந்து கிலானி உரை நிகழ்த்தினார். கஷ்மீர் குறித்த கருத்தரங்குகளிலெல்லாம் சமூக விரோதிகள் தொந்தரவு தருவது வழக்கமான ஒன்றாகும் என எஸ்.எ.ஆர்.கிலானி தெரிவித்தார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: