Oct 25, 2010

காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு தீர்க்க வேண்டும்.

ஸ்ரீநகர், அக். 24: காஷ்மீரில் சுதந்திரம் கோரி போராடி வரும் ஹுரியத் மாநாட்டு கட்சி மத்திய அரசின் மூவர் குழுவைச் சந்திக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று இந்த அமைப்பின் தலைவர் மிர்வைஸ் உமர் பாரூக் அழைப்பு விடுத்துள்ளார்.

காஷ்மீர் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு ஏற்பட 8 அம்ச திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்த ஒரு குழுவை அமைப்பது என்பதும் அதில் ஒரு அம்சமாகும். இதன்படி மூத்த பத்திரிகையாளர் திலீப் படகோங்கர் தலைமையிலான மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு நான்கு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு சனிக்கிழமை வந்தது.

இந்த மூவர் குழுவில் பேராசிரியர் ராதா குமார், தகவல் ஆணையர் எம்.எம். அன்சாரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி உள்பட பேச்சு நடத்த விரும்பும் எந்தக் குழுவுடனும் தாங்கள் பேசத் தயாராக இருப்பதாக படகோங்கர் கூறினார். ஆனால் மத்திய அரசின் மூவர் குழுவைச் சந்தித்துப் பேச சையத் அலி ஷா கிலானி மறுத்துவிட்டார். இதேபோல் ஹுரியத் மாநாட்டு கட்சியின் மற்றொரு தலைவர் மிர்வைஸ் உமர் பாரூக்கும் மூவர் குழுவைச் சந்திக்க மறுத்துவிட்டார்.

காஷ்மீர் மக்களின் கோரிக்கையில் தெளிவு இல்லை என்றால்தான் இதுபோன்ற தூதுக் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் காஷ்மீர் மக்கள் தங்கள் கோரிக்கைகளை மிக தெளிவாகவும் உரத்த குரலிலும் கூறி வருகின்றனர். இதில் குழப்பத்துக்கு சிறிதும் இடமில்லை. இதுபோன்ற மூவர் குழுக்களால் தீர்வு மேலும் தாமதப்படும் என்று மிர்வைஸ் கூறினார்.

ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் பேட்டியளித்தார். இதற்கு முன் இரு நாட்டு பிரதமர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அப்படியிருக்கும்போது மூவர் குழுவுடன் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று அவர் கேள்வி எழுப்பினார். பேச்சுவார்த்தை எப்போதும் உயர் மட்ட அளவில் இருக்க வேண்டும். இனி இதுபோன்ற குழுக்களுடன் பேச இயலாது என்றார் அவர்.

அமெரிக்க கொள்கையில் மாற்றம் வேண்டும்: காஷ்மீர் பிரச்னையைப் பொருத்தவரை அமெரிக்க தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுவரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்னையாகவே காஷ்மீர் இருந்து வந்தது. அதனால் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற நிலையை அமெரிக்கா கொண்டிருந்தது. ஆனால் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் தவறிவிட்டன. பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு இரு தரப்பிலும் உள்ள நம்பிக்கையின்மையே காரணம்.

காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நாட்டின் தலையீட்டை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்குகிறோம். இந்தக் கையெழுத்து பிரதியை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் அளிக்க திட்டமிட்டுள்ளோம். வரும் நவம்பர் 5-ம் தேதி வரை ஜம்மு- காஷ்மீர் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு இந்த மனு நவம்பர் 6-ம் தேதி தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைக்கப்படும். தில்லி வரும் ஒபாமாவிடம் இந்த மனுவை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். பிரச்னைக்கு அமைதி தீர்வுகாண்பதற்கு கடந்த 63 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இன்று வரை பிரச்னைக்குத் தீர்வுகண்டபாடில்லை என்றார் அவர்.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணாமல் தெற்காசியாவில் அமைதியை ஏற்படுத்த முடியாது. எனவே மூன்றாம் தரப்பு தலையீடு மிக மிக அவசியம். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இதில் தலையிட்டு சுமுக தீர்வுக்கு வழிகாண வேண்டும் என்றார்

No comments: