Oct 28, 2010

புலிகள் மீதான தடை: அரசு சாட்சியிடம் வைகோ குறுக்கு விசாரணை.

சென்னை, அக்.28: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை நீட்டிப்பு குறித்து, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றத்தின் அமர்வுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, பழ.நெடுமாறன், வழக்கறிஞர்கள் தேவதாஸ், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜரான காவல் அதிகாரிகளிடம் வைகோ குறுக்கு விசாரணை செய்தார்.

இதுதொடர்பாக மதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் விவரம்:இன்று காலை 10.30 மணி அளவில், சென்னையில் பயங்கரவாத நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாயத்தின் நீதிபதி விக்ரம் ஜித் சென் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்காக வைகோ, பழ. நெடுமாறன், வழக்கறிஞர்கள் தேவதாஸ், சந்திரசேகர் ஆகியோர் தீர்ப்பாயத்திற்கு வந்தனர்.

அரசுத் தரப்பு சார்பில் சிவகங்கை மாவட்ட கியூ பிராஞ்ச் ஆய்வாளர் சந்திரசேகரன், கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் பாஸ்கரன், சென்னை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முகமது அஸ்ரப் மற்றும் திண்டுக்கல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

சாட்சி சந்திரசேகரனிடம் வைகோ , சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 10 (a) (1) கீழ் யார் மீதாவது விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டின்மீது வழக்கு பதிவு செய்துள்ளீர்களா?" என்று கேட்டார். அப்படி எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று சந்திரசேகரன் கூறினார்.

தூத்துக்குடி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் பாஸ்கரன் நீதிமன்றத்தில் சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். அப்பொழுது வழக்கறிஞர் சந்திரசேகரன் உயர் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்றும் அப்பேச்சின் தொடர்ச்சியாக குற்றச் செயல்கள் ஏதேனும் நடந்திருந்தால்தான் குற்றமாகும் என்றும் தெரிவித்து சீமான் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று தீர்ப்பாயத்தில் தெரிவித்து அது சாட்சிக்குத் தெரியுமா என்று கேட்டார். இதைத்தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தில்லி நீதிமன்றத்தில் நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் என நீதிபதி அறிவித்தார் என மதிமுக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: