Aug 21, 2010

கஷ்மீரிகள் கல்வீச்சில் ஈடுபடுவது தற்காப்பிற்காக: தேஜஸ் நிருபருடன் செய்யத் அலிஷா கிலானி பேட்டி.

ஸ்ரீநகர்,ஆக21:கஷ்மீரில் அதிக மக்கள் ஆதரவுப் பெற்றத் தலைவர் தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத்தின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி. விட்டுக் கொடுக்காத மனப்பான்மைதான் கிலானியை பிறர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. கிலானி முழு அடைப்பிற்கு அழைப்புவிடுத்தால் எந்தவொரு கட்சியின் ஆதரவு இல்லாவிட்டாலும் கஷ்மீர் ஸ்தம்பிக்கும்.
கஷ்மீரில் மிக அதிகமாக கைதுச் செய்யப்பட்டவர் கிலானியாவார். கிலானியுடன் தேஜஸ் மலையாள நாளிதழின் பிரதிநிதி நடத்திய நேர்முக பேட்டி கீழே.

தேஜஸ்:பேச்சுவார்த்தைக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விடுத்த அழைப்பை நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள். தற்பொழுது பிரதமர் அளித்த சுயாட்சி வாக்குறுதியையும் நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள். எந்தவொரு சமரசத்திற்கும் இடங்கொடாத கண்டிப்பானவர் கிலானி எனக் குற்றஞ்சுமத்த இது காரணமாகுமே?

கிலானி:பேச்சுவார்த்தைகள் நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் அந்த பேச்சுவார்த்தை பயன்தரத்தக்கதாக மாறவேண்டும்.எது அடிப்படை பிரச்சனை என்பதுதான் முக்கியம். அதுதான் பேச்சுவார்த்தையின் ஒரேயொரு அஜண்டாவாக இருக்கவேண்டும்.கஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதிதான் என்பதை அங்கீகரிப்பதுதான் இந்தியா முதலில் செய்யவேண்டியது. தொடர்ந்து இங்கு நடைமுறையில் உள்ள கொடிய சட்டங்களை வாபஸ் பெறவேண்டும்.

இந்தியா,பாகிஸ்தான்,கஷ்மீரிகள் ஆகியோருடன் தொடர்புடையதுதான் கஷ்மீர் பிரச்சனை.பேச்சுவார்த்தையில் எல்லோரும் கலந்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று தரப்பினரும் முன்வைக்கும் ஃபார்முலாவின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடத்துவதும், தீர்வு காண்பதுமாகும். இத்தகையதொரு பேச்சுவார்த்தையை விரும்பினால், நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம். இந்தியா இவ்விஷயத்தை அங்கீகரிக்காதவரை கஷ்மீர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பயனற்று போகும்.

தேஜஸ்:தங்களை பலவீனப்படுத்த இந்திய அரசு தொடர்ந்து முயல்வதாக நீங்கள் குற்றஞ்சாட்டியுள்ளீர்கள். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் மூலம் தங்களுடைய செல்வாக்கை இந்திய அரசு அங்கீகரிக்கிறதல்லவா? இதனை நல்லதொரு மாற்றமாக அல்லவா நீங்கள் காணவேண்டும்?

கிலானி:அவ்வாறில்லை,இந்தியாவிற்கு உள்ளார்ந்த நேர்மை உண்டெனில் அவர்கள் கஷ்மீர் மக்களுக்காக எதனையாவது செய்யவேண்டும். முன்னர் மீர்வாய்ஸ் பிரிவினருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இதனால் எவ்வித பயனும் விளையவில்லை என மீர்வாய்ஸ் ஃபாரூக்கே கூறியுள்ளார். மக்களுக்கிடையே கஷ்மீர் தலைவர்களின் இமேஜை குலைப்பதே இந்தியாவின் நோக்கம்.பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவிற்கு எவ்வித கஷ்டமுமில்லை. ஆனால், ராணுவ சக்தியைத்தான் இந்தியா எப்பொழுதும் நம்பியுள்ளது.

தேஜஸ்:தேசிய மாநாட்டுக் கட்சி அரசை நீங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்கின்றீர்கள்?

கிலானி:தேசிய மாநாட்டுக் கட்சியானாலும் சரி பி.டி.பி அல்லது காங்கிரஸ் என்னச் செய்தார்கள்? என்னச் செய்யவில்லை? என்பதை நாங்கள் ஒரு பிரச்சனையாக கருதவில்லை.
இந்தியா நேரடியாக கஷ்மீரை ஆளுகிறது.வேறு எவருக்கும் இங்கு அதிகாரமில்லை. சில வாரங்களுக்கு முன்பு கஷ்மீர் மாநில அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் முஹம்மத் ஸாஹரே, சி.ஆர்.பி.எஃப் எங்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்படுவது இல்லை என்று கூறியிருந்தார். அவர்கள் பரிபூரணமாகவே கட்டுப்பாடு இல்லாதவர்கள். நாங்கள் பல் இல்லாத சிறுத்தை என்பதை அமைச்சரவையின் அங்கத்தினரே ஒப்புக்கொள்கிறார்.

தேஜஸ்:கடந்த சில மாதங்களாக கஷ்மீரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அவை பல வேளைகளில் வன்முறையில் முடிகிறது. மக்கள் பாதுகாப்புப் படையினர் மீது கல் வீசுகிறார்கள்.மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தத் தூண்டுவது இதுதானே?

கிலானி:பாதுகாப்புப் படையினர்தான் மக்களை அவர்கள் மீது கல்லெறியத் தூண்டுகின்றனர்.அமைதியான போராட்டங்களைக் கூட இங்கு அனுமதிப்பதில்லை.
பாதுகாப்புப்படையினர் 52 பேரைக் கொன்ற பொழுது அதில் 50 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் இளைஞர்களாவர். மக்களால் கல்லெறியப்பட்ட எந்தவொரு பாதுகாப்புப் படையினரும் இதுவரை இறந்ததில்லை. கல்லெறிவதற்கு மக்கள் தூண்டப்படுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் தற்காப்பிற்காகவே கல்வீச்சில் ஈடுபடுகின்றார்கள். அமைதியாக செல்லும் கண்டனப் பேரணியின் மீது கண்ணீர்க் குண்டு வீசுவதும், துப்பாக்கிச்சூடு நடத்துவதும் நிகழும் பொழுது மக்கள் கல்வீச்சில் ஈடுபடுகின்றார்கள்.

தேஜஸ்:கஷ்மீர் விவகாரத்தில் இந்தியா என்னச் செய்யவேண்டும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

கிலானி:கஷ்மீருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நேரமாகிவிட்டது என சமீபத்தில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் இந்தியாவுக்கு உள்ளார்ந்த நேர்மை உண்டெனில் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே துவங்க வேண்டும். இந்தியா கஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதி என்பதை அங்கீகரிக்க வேண்டும். கஷ்மீர் தொடர்பாக ஐ.நா நிறைவேற்றிய, இந்தியா அங்கீகரித்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறுதான், தீர்விற்கு சூழலை உருவாக்க வேண்டும். துரதிர்ஷ்டவசத்தால், அது உருவாகவில்லை. இந்தியா உள்ளார்ந்த நேர்மையுடன் பேசவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

கடந்த காலங்களுக்கிடையே கஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆறு லட்சம் பேர் இங்குக் கொல்லப்பட்டனர். ஐந்து லட்சம் வரையிலான மக்கள் ஜம்முவில் கொல்லப்பட்டனர். பிரிவினையின் பொழுது, பாகிஸ்தானுக்கு போவதற்குரிய வசதியை ஏற்படுத்தி தருவதாக வாக்களித்து ஒரு இடத்தில் முஸ்லிம்களை ஒன்றுக்கூட்டி தோக்ரா ராணுவம் கூட்டுப்படு கொலைச் செய்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கிடையே ஒரு லட்சம் வரையிலான நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கஷ்மீர் பள்ளத்தாக்கில் 1000 ரகசிய பிண சமாதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுதான் இந்தியாவின் அணுகுமுறை.

தேஜஸ்:கஷ்மீரின் தற்பொழுதைய பிரச்சனையின் பின்னணியில் லஷ்கர்-இ-தய்யிபா என உள்துறை அமைச்சர் கூறுகிறார்?

கிலானி:நிச்சயமாக இல்லை. இது பிரச்சனையை திசைத் திருப்புவதற்காக கூறப்படும் குற்றச்சாட்டாகும். பாகிஸ்தான் கஷ்மீரி இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட பண உதவிச் செய்கிறது என்பதெல்லாம் இந்தியா உருவாக்கும் பொய்களாகும். எவரும் இங்கு வந்து இங்குள்ள பிரச்சனை என்ன? என்பதை புரிந்துக் கொள்ளலாம். இங்கு ஒரு லஷ்கரும் இல்லை. வெள்ளப்பெருக்கு போன்ற சொந்த பிரச்சனைகளால் அல்லாடுகிறது பாகிஸ்தான். அவர்களுக்கு எங்களுடைய பிரச்சனைக்கு தார்மீக ஆதரவு அளிக்கக்கூட இயலவில்லை.

நன்றி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: