Feb 25, 2010

கோவாவில் போதைப் பொருள்களுடன் இஸ்ரேலிய வியாபாரி கைது.

பானாஜி:3.5லட்சம் ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்களுடன் இஸ்ரேலிய குடிமகன் ஒருவர் கோவாவில் கைதுச் செய்யப்பட்டார்.

அஞ்சுனா பீச்சில் போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்த டேவிட் க்ரஹஸ் என்ற டூடூ என்பவர் தான் கைதுச் செய்யப்பட்டுள்ளார். டூடூ இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் ப்ரைவட் லிமிட்டட் என்ற நிறுவனம் இவர் பெயரில் தான் உள்ளது. நிறுவனம் ஆரம்பித்து 10 ஆண்டுகளாகியும் வரவு செலவு ஒன்றும் இதுவரைக் காட்டப்படவில்லை. இந்நிறுவனம் சந்தேகத்தின் நிழலில் உள்ளதால் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆன்டி நார்கோடிக் செல் போலீஸ் சூப்பிரண்டண்ட் பன்ஸல் கூறுகிறார்.

இந்நிறுவனத்தில் உள்ளூரைச் சார்ந்த இரண்டு இயக்குநர்கள் உள்ளனர். இவர்களிடமும் போலீஸ் விசாரணை நடத்தும். இந்நிறுவனம் வியாபரத்தில் ஒன்றும் ஈடுபடவில்லை என பன்ஸல் கூறுகிறார்.

2005 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு 32 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்ததாக ஆவணம் உள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். மருந்து வியாபாரி என்ற பெயரில் பிஸினஸ் விசாவில் கோவாவிற்கு வந்துள்ளார் டூடூ. இவருடைய வசிப்பிடத்தில் ஏராளமான மருந்து வியாபாரிகள் சந்தித்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் கூறுகிறது. டூடூவின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இவரின் நிறுவனத்தைக் குறித்து விரிவான விசாரணைக்கு துவங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் போதைப்பொருள் வியாபாரம் பரவலாவதற்கு டூடூ தனது நிறுவனத்தை பயன்படுத்தினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்திவருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மஹாராஷ்ட்ராவில் 2008ஆம் ஆண்டு நடந்த போதைப் பொருள் வேட்டையின் போது டூடூ மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவிடம் சிக்கினார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments: